தூக்கில் தொங்கிய மகன்... கதவை திறந்த தாய் கதறல்: டியூசனுக்கு போகச் சொன்னதால் நடந்த விபரீதம்

தூக்கில் தொங்கிய மகன்... கதவை திறந்த தாய் கதறல்: டியூசனுக்கு போகச் சொன்னதால் நடந்த விபரீதம்

நாகர்கோவிலில் தாய் டியூசன் போகச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நாகர்கோவில் கோட்டாறு டிவிடி காலணியைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மனைவி பானு. பத்மநாபன் தஞ்சாவூரில் உள்ள உணவகம் ஒன்றில் தங்கியிருந்து வேலைசெய்து வருகிறார். இந்தத் தம்பதிக்கு மது பிரசாத்(15) என்னும் மகனும், ஒரு மகளும் உள்ளனர். மது பிரசாத் நாகர்கோவில் அரசுப்பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். மாணவன் மது பிரசாத்திடம், அவனது தாய் பானு டியூசனுக்குச் செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் மது பிரசாத் டியூசனுக்கு செல்லவில்லை.

இதனால் அவரை, தாய் பானு கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் தூங்கச் சென்ற மது பிரசாத் இன்று காலையில் அறைக்கதவைத் திறக்கவில்லை. கதவைத் திறந்துபார்த்த போது, மது பிரசாத் தூக்கில் சடலமாக தொங்கினார். இதைப் பார்த்து தாய் கதறியுள்ளார். தகவல் அறிந்து வந்த கோட்டாறு போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in