
காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளுக்கு எதிராக பஞ்சாபின் பட்டியாலா நகரில் சிவசேனா கட்சியினர் இன்று நடத்திய ஊர்வலம் கலவரத்தில் முடிந்தது. சிவசேனாவின் ஊர்வலத்துக்கு எதிராக ‘நிஹாங்’ சீக்கிய சமுதாயத்தினர் போராட்டத்தில் இறங்கியதையடுத்து அங்கு வன்முறை வெடித்தது.
பட்டியாலாவில் உள்ள காளி கோயில் அருகே சிவசேனா கட்சியினரின் ஊர்வலம் சென்றபோது, நிஹாங் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கைகளில் வாட்களை ஏந்தி காலிஸ்தான் ஆதரவு முழக்கத்துடன் அந்த ஊர்வலத்தைக் குறுக்கிட்டனர். இதையடுத்து அங்கு வன்முறை வெடித்தது. இரு தரப்பினரும் கற்களை எறிந்து தாக்கிக்கொண்டனர். இதில் இருவர் காயமடைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட நிஹாங் சமுதாயத்தினர் சிலர் தாக்கப்பட்டதாகப் பரவிய தகவல்களால் வன்முறை வெடித்ததாகக் கூறப்படுகிறது.
நிலைமையைக் கட்டுப்படுத்த போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டதாக பஞ்சாப் அரசு கூறிய நிலையிலும், அங்கு பதற்றமான சூழலே நிலவியதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இரவு 7 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த ஊர்வலத்துக்கு சிவசேனா கட்சியினர் அனுமதி வாங்கவில்லை என்று காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர். இந்தச் சம்பவத்தால் அதிருப்தியடைந்திருக்கும் சிவசேனா தலைமை, கட்சிவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அக்கட்சியின் பஞ்சாப் மாநிலத் தலைவர் ஹரீஷ் சிங்லாவை நீக்கியிருக்கிறது.
இந்தச் சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது என முதல்வர் பகவந்த மான் கூறியிருக்கும் நிலையில், ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு முழுக்க முழுக்க அராஜக அரசாகச் செயல்படுவதாக காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பாஜ்வா கூறியிருக்கிறார்.