நடுரோட்டில் விஜே- தனியார் ஊழியர் இடையே மோதல்; கார் கண்ணாடி உடைப்பு: வழிவிடாததால் நடந்த தகராறு

வீஜே நிக்கி
வீஜே நிக்கி

வழிவிடுவதில் ஏற்பட்ட தகராறில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரும், தனியார் நிறுவன ஊழியரும் நடுரோட்டில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தகராறில் டிவி தொகுப்பாளரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் வீஜே நிக்கி (27). இவர் பிரபல யூடியூப் சேனல் உட்பட பல்வேறு தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். நேற்று நிக்கி புரசைவாக்கத்தில் உள்ள தனது நண்பரை சந்திப்பதற்காக காரில் சென்றார்.

புரசைவாக்கம் பார்த்தசாரதி வழியாக சென்றபோது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் வழிவிடாமல் நின்றதாக கூறப்படுகிறது. பலமுறை ஹார்ன் அடித்தும் வழிவிடாமல் இருந்ததால் ஆத்திரமடைந்த வீஜே நிக்கி கீழே இறங்கி சென்று பைக்கில் வந்த நபரிடம் இது குறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி வீஜே நிக்கி அந்த நபரை தாக்கியதால், ஆத்திரமடைந்த பைக் ஓட்டியும் அவரை தாக்க இருவரும் நடுரோட்டில் ஒருவரையொருவர் மாறிமாறி தாக்கி கொண்டதில் காயமடைந்தனர்.

பின்னர் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் நிக்கியின் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கினார். இதை கண்ட அருகிலிருந்த பொதுமக்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் காயமடைந்த இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு, இது குறித்து வேப்பேரி காவல் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் வழக்கறிஞரிடம் கணக்காளராக வேலை பார்த்து வரும் ஓட்டேரியை சேர்ந்த ராஜேஷ்(31) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் சம்மந்தப்பட்ட இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in