பள்ளியிலேயே ஆசிரியர்கள் கட்டிப்புரண்டு சண்டை... தெறித்து ஓடிய மாணவர்கள்: அதிரடி காட்டிய அதிகாரி

பள்ளியிலேயே ஆசிரியர்கள் கட்டிப்புரண்டு சண்டை... தெறித்து ஓடிய மாணவர்கள்: அதிரடி காட்டிய அதிகாரி

அரசு பள்ளி ஆசிரியர்கள் இருவர் மாணவர்கள் மத்தியில் மல்லுகட்டிக் கொண்ட சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள வெட்டன் விடுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பள்ளியில் பத்தாண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் ஒரு பிரிவாகவும், தகுதித்தேர்வுகள் மூலம் தேர்ச்சி பெற்று பணிபுரியும் ஆசிரியர்கள் ஒரு பிரிவாகவும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இவர்களுக்குள் தொடர்ந்து கருத்து வேற்றுமை இருந்து வருகிறதாம்.

இந்நிலையில் தமிழ் ஆசிரியர் தமிழ்ச்செல்வன் என்பவர் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்த வழியாக வந்த ஆங்கில ஆசிரியர் சந்தோஷ் என்பவர் வகுப்பையும், ஆசிரியரையும் உற்றுப் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தமிழ்செல்வன் ஏன் என்னை உற்றுப் பார்க்கிறாய் என்ற கேட்க இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

அந்த வாக்குவாதம் முற்றிப்போய் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்புரண்டு சண்டையில் ஈடுபட்டிருக்கின்றனர். இதைப்பார்த்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து வகுப்பறையை விட்டு வெளியில் ஓடி வந்தனர். அதன் பின்னர் சக ஆசிரியர்கள் வந்து இரண்டு ஆசிரியர்களையும் சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது.

ஆசிரியர்கள் மோதிக்கொண்ட இந்த சம்பவம் சமூக ஊடகங்கள் மூலமாக வெளியில் பரவியது. இதனையடுத்து அறந்தாங்கி கல்வி மாவட்ட கல்வி அதிகாரி மணிவண்ணன் பள்ளிக்கு சென்று இது குறித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் மோதல் நடந்தது உண்மை என தெரிய வந்ததும் ஆசிரியர்கள் இருவரையும் வெவ்வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in