இரவில் கன்டெய்னர் லாரி மீது பாய்ந்த போலீஸ் ஜீப்; உயிருக்கு போராடும் இன்ஸ்பெக்டர்: தூக்க கலக்கத்தில் நடந்த சோகம்

இன்ஸ்பெக்டர் ஜெகநாதன்
இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் இரவில் கன்டெய்னர் லாரி மீது பாய்ந்த போலீஸ் ஜீப்; உயிருக்கு போராடும் இன்ஸ்பெக்டர்: தூக்க கலக்கத்தில் நடந்த சோகம்

மீஞ்சூர் சுங்கசாவடி அருகே சாலையோரம் நின்றிருந்த கன்டெய்னர் லாரி போலீஸ் ஜீப் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த இன்ஸ்பெக்டர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சோழவரம் காவல் நிலையத்தில் சட்டம்- ஒழுங்கு காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஜெகநாதன் (52 ). நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர் ஜெகநாதன் தனது ஒட்டுநர் காவலர் வெங்கட்ராமனுடன் போலீஸ் வாகனத்தில் மீஞ்சூர் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு இரவு முழுதும் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர் ஜெகநாதன் இரவு பணி முடிந்து அதிகாலை மீஞ்சூர்-வண்டலூர் பைபாஸ் சாலை வழியாக வீடு திரும்பி கொண்டிருந்தார். மீஞ்சூர் வழுதிகை மேடு (சுங்கச்சாவடி) அருகே வரும் போது சாலையோரம் நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது போலீஸ் ஜீப் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆய்வாளர் ஜெகநாதனுக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

விபத்துக்குள்ளான போலீஸ் ஜீப்
விபத்துக்குள்ளான போலீஸ் ஜீப்

போலீஸ் ஜீப்பை ஓட்டி வந்த காவலர் வெங்கட்ராமன் லேசான காயங்களுடன் தப்பினார். பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற சோழவரம் போக்குவரத்து போலீஸார் பொதுமக்கள் உதவியுடன் ஆய்வாளரை மீட்டு செங்குன்றம் பாடியநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் ஆய்வாளர் ஜெகநாதன் மேல் சிகிச்சைக்காக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் ஆய்வாளருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து சோழவரம் போக்குவரத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் போலீஸ் ஜீப்பை ஓட்டி சென்ற காவலர் வெங்கட்ராமன் தூக்க கலக்கத்தில் இருந்ததால் சாலையோரம் கன்டெய்னர் லாரி நின்றிருந்தது தெரியாமல் லாரியின் பின்பக்கத்தில் மோதி விபத்து ஏற்பட்டது தெரியவந்ததுள்ளது. இதனையடுத்து ஓட்டுநர் வெங்கட்ராமனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in