சீரமைக்கப்படாத மதகுகளால் சித்தாமூர் ஏரி உடைந்தது: அதிகாரிகள் ஆய்வு

சீரமைக்கப்படாத மதகுகளால் சித்தாமூர் ஏரி உடைந்தது: அதிகாரிகள் ஆய்வு

செங்கல்பட்டு பகுதியில் சீரமைக்கப்படாத மதகு காரணமாக ஏரி ஒன்று உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாகக் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்குவதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 909 ஏரிகளில் 89 ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 98 ஏரிகள் 76 சதவீதமும், 256 ஏரிகள் 51 சதவீதமும், 328 ஏரிகள் 26 சதவீதமும் நிரம்பியுள்ளது. இந்நிலையில் சரியான பராமரிப்பு இல்லாததால் சித்தாமூர் ஏரி உடைந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ளது சித்தாமூர். இப்பகுதியில் உள்ள ஏரியால் 120 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசனம் பெறுகிறது. ஏற்கெனவே ஏரியின் மதகுகள் பழுதடைந்துள்ள நிலையில் ஏரியிலிருந்து மதகு வழியாக நீர் கசிந்து வந்துள்ளது. இதையடுத்து ஏரியின் கரை உடைந்து தண்ணீர் முழுவதுமாக வெளியேறிவருகிறது. இதைத் தொடர்ந்து பொதுப்பணித்துறையினர் அந்த ஏரியை ஆய்வு செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in