சிக்கிக்கொண்ட சித்ரா ராமகிருஷ்ணா!

மர்மயோகி, பக்தை மற்றும் பங்குச் சந்தை முறைகேடு!
சித்ரா ராமகிருஷ்ணா
சித்ரா ராமகிருஷ்ணா

உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் ஊழல் முறைகேடுகளில் சிக்குவது இந்தியாவில் அவ்வப்போது நிகழும் விஷயம். இந்த முறை அப்படி சிக்கியிருப்பவர் சித்ரா ராமகிருஷ்ணா.

தேசியப் பங்குச் சந்தை (என்எஸ்இ) தலைமை நிர்வாக அதிகாரியாகவும் (சிஇஓ), மேலாண் இயக்குநராகவும் இருந்தவர் சித்ரா. இவருக்கு நிகராக இந்த விவகாரத்தில் பேசப்படுபவர்கள் அவ்வளவாக அறியப்படாத நபரான ஆனந்த் சுப்ரமணியனும், இதுவரை யார் கண்ணிலும் பட்டிராத மர்ம சாமியார் சிரோமணியும். ஆனந்த் சுப்ரமணியன், என்எஸ்இ-யின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தவர். இமயமலையில் வசிப்பதாக சித்ரா குறிப்பிட்ட முகம் தெரியா சாமியார் சிரோமணி, சித்ராவை மின்னஞ்சல் வழியே வழிநடத்தியவர். த்ரில் வெப் சீரிஸுக்கு நிகரான மர்மங்களும் திருப்பங்களும் நிறைந்ததாக அமைந்திருக்கிறது இந்த விவகாரம்!

என்எஸ்இ-யின் முதல் பெண் சிஇஓ!

சித்ரா ராமகிருஷ்ணா சென்னையைச் சேர்ந்தவர். மும்பையில் படித்து வளர்ந்தவர். தாத்தா, அப்பா சார்ட்டட் அக்கவுன்ட் படித்தவர்கள் என்பதால், நிதித் துறையில் கால்பதிக்க விரும்பிய சித்ரா, பங்குச் சந்தை பக்கம் வந்து சேர்ந்திருந்தார். 2013 ஏப்ரலில் என்எஸ்இ-யின் சிஇஓ ஆகவும், மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார் சித்ரா. என்எஸ்இ-யின் முதல் பெண் சிஇஓ எனும் பெருமையும் அவருக்குக் கிடைத்தது. பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார். 2018 வரை சித்ராவின் பதவிக்காலம் இருந்த நிலையில், 2016 டிசம்பரிலேயே அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

2015-ல் ‘கோ லொக்கேஷன்’ மூலம் பங்குகளின் ஏற்ற இறக்கம் தொடர்பாக, குறிப்பிட்ட நிறுவனங்களுக்குத் தகவல் அளித்து முறைகேட்டில் அவர் ஈடுபட்டதாக எழுந்த புகார்கள் தேசியப் பங்குச் சந்தையை உலுக்கின. அப்போது செபியின் தொழில்நுட்ப ஆலோசனக் குழு முன்வைத்த தகவல்களை சித்ரா மறுத்தார். ஆனந்த் சுப்ரமணியன் நியமிக்கப்பட்ட முறை குறித்தும் புகார்கள் எழுந்தன. அதனால்தான், அவர் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டாரா என்று ஊகங்கள் எழுந்து அடங்கின. எனினும், அது பங்குச் சந்தை வட்டாரங்களைத் தாண்டி பெரிய அளவில் பேசுபொருளாகவில்லை.

வெடித்த சர்ச்சை

கடந்த சில நாட்களாக, சித்ராவின் பெயர் தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் அளவுக்கு சர்ச்சை வெடித்திருக்கிறது. பிப்ரவரி 11-ல் தேசியப் பங்குச் சந்தையின் தற்போதைய மேலாண் இயக்குநர் விக்ரம் லிமாயே உள்ளிட்ட அதிகாரிகள், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரிய (செபி) அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள சித்ராவின் வீட்டிலும், சென்னையில் உள்ள ஆனந்த் சுப்ரமணியனின் வீட்டிலும் வருமான வரி சோதனைகள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சிபிஐ எனப் பல்முனை விசாரணையில் சித்ராவும் இன்ன பிறரும் வந்தார்கள்.

ஆனந்த் சுப்ரமணியனின் மனைவியும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறார். கோ லொக்கேஷனில் முறைகேடு செய்ததன் மூலம் பெறப்பட்ட பணம், எங்கெல்லாம் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது எனும் விசாரணையும் நடந்துவருகிறது.

நகைமுரண்

“நாம் ஈட்டும் பணத்தை இவர் காட்டும் வழியில் முதலிட்டோம் என்றால், பன்மடங்கு பணம் உயரும் என்பதில் மாற்றுக் கருத்தும் உண்டோ!” என்று 2017-ல் சித்ராவுக்கு விருது வழங்கப்பட்ட நிகழ்வின்போது, ஏகத்துக்கும் புகழ்ந்து மேடையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், சித்ராவோ ‘சித்தபுருஷர்’, ‘யோகி’ என்றெல்லாம் அவரால் விளிக்கப்படும் சாமியாரின் சொல்படிதான் இந்தியப் பங்குச் சந்தையை நிர்வகித்திருக்கிறார் என இப்போது தெரியவந்திருக்கிறது. மின்னஞ்சல் மூலமாகவே சித்ராவுக்குப் பல ஆணைகளை அனுப்பியிருக்கிறார் அந்த சாமியார். கூடவே, சித்ரா தொடர்பான வர்ணனைகளையும் அந்த சாமியார் எழுதியிருப்பது, செபி வெளியிட்ட 190 பக்க அறிக்கையில் தெரியவந்திருக்கிறது.

யாரை எந்தப் பதவியில் நியமிப்பது, என்ன சம்பளம் கொடுப்பது என்பதில் தொடங்கி பல முக்கிய முடிவுகளில் சித்ராவை வழிநடத்தியிருக்கிறார் அந்த சாமியார். ரிக், யஜூர், சாம என மூன்று வேதங்களையும் குறிக்கும் வகையிலான ரிக்யஜுர்சாம (rigyajursama) எனும் மின்னஞ்சல் முகவரியிலிருந்துதான் உத்தரவுகளை அந்தச் சாமியார் அனுப்பியிருக்கிறார். என்எஸ்இ-யின் செயல்பாடுகள், முக்கிய முடிவுகள் என எல்லா தகவல்களையும் சாமியாருக்கு அனுப்பியிருக்கிறார் சித்ரா.

அளவில்லா சலுகைகள்

ஆனந்த் சுப்ரமணியம் நியமிக்கப்பட்டதும் மர்மமான முறையிலேயே நடந்திருக்கிறது. அவருக்கு நேர்காணல் கூட நடத்தப்படவில்லை என என்எஸ்இ-யின் மனிதவளப் பிரிவின் ஆவணங்கள் மூலம் தெரியவருகிறது. பங்குச் சந்தையில் எந்த முன் அனுபவமும் இல்லாத ஆனந்த், அதற்கு முன்பு ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றுவந்தவர். என்எஸ்இ-யில் சேர்ந்த பின்னர், அவரது ஆண்டு சம்பளம் 1.68 கோடி ரூபாய் ஆனது. மூன்றே ஆண்டுகளில் அது 4.21 கோடி ரூபாயாக உயர்ந்தது. எப்போது வேண்டுமானாலும் அலுவலகத்துக்கு வரலாம்; எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்றெல்லாம் ஆனந்துக்குச் சலுகைகள் வழங்கப்பட்டன. ஆனந்துக்கு வழங்கப்பட்ட சம்பளம், சலுகைகள் தொடர்பாகக் கேள்விகள் எழுந்தபோது, “அவர் ஊழியர் அல்ல; ஆலோசகர் மட்டும்தான்” எனச் சொல்லி அவருக்கு ஆதரவாக நின்றிருக்கிறார் சித்ரா.

பங்குகளை சுயப் பட்டியல் (செல்ஃப் லிஸ்ட்டிங்) இடுவது தொடர்பாக பிரதமர் அலுவலகம், நிதியமைச்சகம், செபி ஆகியவற்றை அணுகுமாறும் சித்ராவை சாமியார் பணித்திருக்கிறார். எனினும், 2016 மே மாதம் சித்ரா தலைமையிலான என்எஸ்இ பரிந்துரைத்த செல்ஃப் லிஸ்ட்டிங்குக்கு செபி அனுமதி மறுத்துவிட்டது.

சந்தேகம் எழுப்பும் சங்கேதங்கள்

சித்ராவுக்கு அந்த சாமியார் அனுப்பிய மின்னஞ்சல்களில் தற்போது அதிகம் பேசப்படுவது, செஷல்ஸ் தீவுக்குச் செல்ல வருமாறு விடுத்த கடிதம்தான். அதில், அடுத்த மாதம் செஷல்ஸ் செல்ல விரும்புவதாகவும், அதற்காகப் பயணப் பைகளைத் தயாராக வைத்திருக்குமாறும் சாமியார் சித்ராவைக் கேட்டுக்கொள்கிறார். அந்த மின்னஞ்சலில் கஞ்ச்சன், காஞ்சனா, பார்கவா, சேஷு ஆகிய பெயர்களும், ‘இரண்டு குழந்தைகள்’ எனும் பதமும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்படும் தகவல்களில் தர்க்கப் பிழைகள் இருப்பதால், அவை சங்கேத வார்த்தைகளாக இருக்கக்கூடும் என விசாரணை அதிகாரிகள் கருதுகிறார்கள். குறிப்பாக, வரி ஏய்ப்பு செய்பவர்களின் புகலிடமாக இருக்கும் இடங்களில் செஷல்ஸ் தீவுகளும் ஒன்று. ஆக, ஆன்மிகத்தைத் தாண்டி முதலீடு தொடர்பான சூட்சுமங்கள் தெரிந்த நபராகத்தான் அந்த சாமியார் இருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. ‘சாமியார்’ அனுப்பிய மின்னஞ்சல்களில் ஆனந்த் சுப்ரமணியனுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டிருப்பதும் சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. ஆக, அந்த சாமியார் ஆனந்த் சுப்ரமணியனாகவே இருக்க வாய்ப்பு அதிகம் எனக் கருதப்படுகிறது.

சித்ரா சிஇஓவாக இருந்தபோது, முறைகேடு தொடர்பாக என்எஸ்இ அலுவலகத்துக்கு விசாரணைக்குச் சென்ற செபி அதிகாரிகள் இருவர், ஓர் அறையில் வைத்துப் பூட்டப்பட்ட சம்பவமும் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. முறைகேடுகள் தொடர்பான தகவல்கள் என்எஸ்இ வாரியத்துக்குத் தெரிந்திருந்தும், செபிக்கு அது குறித்து தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

கவலைக்குரிய விஷயம்

இவ்விஷயத்தில் அரசியல் ஆதாயம் தேடுவது என்பது பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் ரொம்பவே சிக்கலான விஷயம். காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கவுரவ் பல்லவ் இவ்விவகாரம் தொடர்பாக, செய்தியாளர் சந்திப்பின்போது பாஜக அரசைக் குற்றம்சாட்டியிருந்தார். மறுபுறம், மோடி குறித்தும் பாஜக ஆட்சி குறித்தும் விமர்சனம் செய்த முன்னாள் முதல்வர் மன்மோகன் சிங்குக்குக் கொடுத்த பதிலடியில், சித்ரா விவகாரத்தைக் குறிப்பிட்டிருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

மொத்தத்தில், கஷ்டப்பட்டு ஈட்டிய பணத்தைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து, நகத்தைக் கடித்துக்கொண்டு பங்குச் சந்தை நிலவரங்களைக் கவனித்துவந்தவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பதை அறிந்து வேதனையடைந்திருக்கிறார்கள். முறைகேடுகள் எந்த மட்டத்திலும், எந்த வடிவிலும் வரலாம் என்பதற்கு உதாரணமாகியிருக்கின்றன என்எஸ்இ-யில் நடந்திருக்கும் இந்த முறைகேடுகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in