உக்ரைன் போர் நெருக்கடியின் பின்னே ‘மாயக்கரம்’

அமெரிக்காவை சீண்டும் சீனா
உக்ரைன் போர்முனையில்
உக்ரைன் போர்முனையில்

உக்ரைன் விவகாரத்தின் பின்னே உள்நோக்கத்துடனான மாயக்கரம் செயல்படுவதாக, மறைமுகமாக அமெரிக்காவை சீனா குற்றம்சாட்டியுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை இரண்டாம் ஆண்டில் அடியெடுத்ததிலிருந்து, அதன் போக்குகளில் மாற்றம் தென்படத் தொடங்கியுள்ளது. உக்ரைனுக்கான நிதியுதவி மற்றும் ஆயுத தளவாட உதவிகளை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அதிகரித்துள்ளன. தோல்வி அச்சத்தில் அணு ஆயுத தாக்குதலுக்கும் தயங்க மாட்டோம் என்று ரஷ்யா உறுமி வருகிறது.

நேரிடையாக உக்ரைனுக்கு உதவி வரும் அமெரிக்கா, ’ரஷ்யாவுக்கு மறைமுகமாக சீனா உதவுவதாக’ குற்றம்சாட்டி வருகிறது. இதற்கு சீனா மறுப்பும் தெரிவித்துள்ளது. அதன் அங்கமாக உக்ரைன் போரின் பின்னணியில் முழுதும் அமெரிக்காவே இருப்பதாக தற்போது சீனா குற்றம்சாட்டியுள்ளது.

சீன வெளியுறவுத் துறை அமைச்சரான க்யின் காங், அதனை வலியுறுத்தும் வகையில் அமெரிக்கா மீது தற்போது மேலும் பாய்ந்திருக்கிறார். “உக்ரைன் நெருக்கடியின் பின்னே ஒரு மாயக்கரம் செயல்பட்டு வருகிறது. புவிசார் அரசியலில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் வகையில், உக்ரைன் விவகாரத்தை அது பயன்படுத்திக்கொள்ள முயல்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் பின்னணியில் உக்ரைனை தூண்டிவிட்டு புவிசார் அரசியலில் ஆதாயம் அடையப் பார்ப்பதாக அமெரிக்கா மீதான குற்றச்சாட்டு ஏற்கனவே எழுந்ததுண்டு. உலக வல்லரசுகளுக்கான போட்டியில் ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிராக, ஆசிய - ஐரோப்பிய களத்தில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறதாகவும் அந்த குற்றச்சாட்டுகள் நீண்டன. தற்போது அவற்றை வழிமொழியும் வகையில், அமெரிக்காவுக்கு எதிராக சீனா மீண்டும் விரல் நீட்டுகிறது.

மேலும் சீனா மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டினை மறுக்கும் வகையில் “போரில் ஈடுபட்டிருக்கும் உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கும் எந்த உதவியையும் சீனா செய்யவில்லை. குறிப்பாக ரஷ்யாவுக்கு சீனா உதவுவதாக சொல்லப்படுவது உண்மையில்லை” என்றும் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in