‘சைபர் வார்’ தொடுக்கும் சீனா; அலறும் அமெரிக்கா: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை!

சீனாவின் ’சைபர் வார்’
சீனாவின் ’சைபர் வார்’

அமெரிக்காவின் உள்கட்டமைப்பு மீது சீனா சைபர் வார் தொடுப்பதாக மேற்கு நாடுகளின் உளவு அமைப்புகளும், மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் எச்சரித்துள்ளன.

நவீன காலத்தில் மரபான போர் என்பதன் இலக்கணங்கள் மாறி வருகின்றன. புஜபல பராக்கிரமங்களோடு ஆயுதங்கள் கொண்டு போரிடுவதைவிட, ஹேக்கர்கள் தயவில் இணையப் பெருவெளியில் மோதுவது அதிகரித்துள்ளது. எதிரி தேசத்தின் பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் ஊடுருவி, அவற்றை குலைப்பது மற்றும் நாசம் செய்வதன் மூலமும் எதிரி தேசத்தை கலங்கடிக்கச் செய்கின்றன. அப்படியான தாக்குதல் ஒன்றினை தங்கள் மீது சீனா நிகழ்த்துவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது. இதனை மேற்கு நாடுகளின் உளவு அமைப்புகளைத் தொடர்ந்து, டெக் நிறுவனமான மைக்ரோசாப்ட் தற்போது உறுதி செய்துள்ளது.

அமெரிக்கா - சீனா ஆகிய நாடுகள் பரஸ்பரம் ஹேக்கர்களைக் கொண்டு உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அவை குறித்தான பரஸ்பரப் புகார்களையும் அவ்வப்போது பற்ற வைத்து வருகின்றன. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களின் தொலைத்தொடர்பு, போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த சைபர் பாதுகாப்பு அம்சங்களில், சீனத்து ஹேக்கர்கள் அத்துமீறி ஊடுருவி இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்தான புகார்கள் வெளியானதும், சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் அவற்றை முற்றிலுமாக நிராகரித்துள்ளார். ” சீனா மீது பெரும் சைபர் தாக்குதலை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதனை மறைக்கவே இது போன்ற புகார்களை அவிழ்த்து விடுகிறது. சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் இந்த பிரச்சாரங்களுக்கு இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகியவை உடந்தை” எனத் தாக்கியுள்ளார்.

அமெரிக்கா - சீனா இடையே ஹேக்கிங் புகார்கள் பல வருடங்களாக பரஸ்பரம் தொடர்ந்து வந்தபோதிலும், பகிரங்க சைபர் வார் அளவுக்கு மிகப்பெரும் இணையவெளித் தாக்குதலை சீனா திட்டமிட்டிருப்பதாக, அமெரிக்கா தற்போது சந்தேகிப்பதிலும் அர்த்தம் உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்த் தாக்குதல் போல, தைவான் மீதான ஊடுருவல் மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளை சீனா தொடங்கும்போது, அமெரிக்காவில் சீனத்து ஹேக்கர்களின் ’சைபர் வார்’ வெடிக்கும் என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை அனுமானிக்கிறது. இதன் மூலம் அமெரிக்காவை நிலைகுலையைச் செய்யவும், தைவான் விவகாரத்தில் அது மூக்கு நுழைக்காதபடி தடுக்கவும் சீனா திட்டமிட்டுள்ளது என்கிறது என்எஸ்ஏ.

குறிப்பாக அமெரிக்காவின் ராணுவம் சார்ந்த நெட்வொர்க்குகள் கடும் தாக்குதலுக்கு ஆளாகும் எனவும் அவை எச்சரிக்கின்றன. சீனாவின் சைபர் வார் முன்னேற்பாடுகள் குறித்து மேற்கு நாடுகள் நீண்ட காலமாக எச்சரித்து வந்த நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனமும் சீனாவின் சைபர் அத்துமீறலை உறுதி செய்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in