‘காப்பகங்களிலிருந்து குழந்தைகள் வெளியேறியதை எங்களிடம் தெரிவிக்காதது ஏன்?’

கேஜ்ரிவாலிடம் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு கேள்வி
‘காப்பகங்களிலிருந்து குழந்தைகள் வெளியேறியதை எங்களிடம் தெரிவிக்காதது ஏன்?’

டெல்லி பட்ஜெட் தொடர்பாக, கடந்த சனிக்கிழமை (மார்ச் 26) செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், தெருவோரங்களில் வசிக்கும் குழந்தைகளின் நலனுக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களின் மேம்பாட்டுக்காகத் தொடங்கப்படும் சிறப்புப் பள்ளிகளில் அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் பெருமிதத்துடன் தெரிவித்திருந்தார்.

கூடவே, குழந்தைகள் நல மையங்களில் குழந்தைகள் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்படுவதாக அவர் புகார் தெரிவித்தார். அங்கு தேவையான வசதிகள் செய்யப்படாததாலும், முறையாகப் பராமரிக்காததாலும் அங்கிருந்து அவர்கள் வெளியேறிவிடுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், அவரது கருத்துகளால், குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் அதிருப்தியடைந்திருக்கிறது. அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் அரசுகளுடன், 4 மாதாந்திர கூட்டங்களை நடத்தியிருப்பதாகவும், காப்பகங்களிலிருந்து குழந்தைகள் வெளியேறியது குறித்து மகளிர் மட்டும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை தங்களிடம் எதையும் தெரிவிக்கவில்லை என்றும் ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கானூங்கோ கூறியிருக்கிறார்.

அத்துடன், டெல்லியில் உள்ள குழந்தைகள் நல மையங்களில் நிலவும் மோசமான சூழலுக்குத் தீர்வு காண மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்றும் கேஜ்ரிவால் அரசிடம் அறிக்கை கேட்டிருக்கிறது அந்த ஆணையம். குறிப்பாக, சிறார் நீதிச் சட்டம் (2015) மற்றும் 2016-ல் வெளியிடப்பட்ட அச்சட்டத்தின் விதிமுறைகள் ஆகியவற்றை இந்த மையங்களில் பின்பற்றாத அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை கேட்கிறது ஆணையம்.

மேலும், கடந்த 6 மாதங்களில் தெருவோரங்களில் மீட்கப்பட்டு குழந்தைகள் காப்பகங்களில் தங்கவைக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை, காப்பங்களிலிருந்து வெளியேறிய குழந்தைகளின் எண்ணிக்கை, இதுபோன்ற சம்பவங்களில் பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை குறித்த விவரங்கள் எனப் பல்வேறு தகவல்களை டெல்லி அரசிடம் கோரியிருக்கிறது குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம்.

இந்தத் தகவல்கள் அனைத்தையும் 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் டெல்லி அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

Related Stories

No stories found.