
கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து வரும் முதல்வர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதைடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த வாரம் முதல் கனமழை பெய்து வந்தது. குறிப்பாக மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதுவரை இல்லாத அளவில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் 122 ஆண்டுகளுக்குப் பிறகு 44 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் அங்குள்ள பயிர்கள், வீடுகள் நீரில் மூழ்கி கடக்கின்றன. இதேபோல் கடலூர் மாவட்டம் கனமழையால் 250 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நெற்பயிர்கள் சுமார் 84 ஆயிரத்து 950 ஹெக்டேர் அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. 3966 ஹெக்டேர் அளவில் நெற்பயிர்களில் வெள்ள நீர் சூழ்ந்து இருக்கிறது. 4,650 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வை மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாக கடலூர் மாவட்டம் சென்ற முதல்வர் ஸ்டாலின், கீழ்பூவாணிகுப்பம் பகுதியில் மழையால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினார். முதல்வருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் உடன் இருக்கின்றனர்.