பெண் காவலர்களுக்கு 9 முக்கிய வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் பெண் காவலர்களுக்கு 9 முக்கிய வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
Updated on
2 min read

பெண் காவலர்களுக்கு 9 முக்கிய வரலாற்று சிறப்பிக்க அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

சென்னையில் இன்று மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ``பெண் காவலர்களுக்கு நவரத்தினம் போன்று ஒன்பது வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்புகளை தற்போது வெளியிடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒன்று, பெண் காவலர்கள் குடும்ப தலைவிகளாக இருந்து கொண்டு கடினமான காவல் பணி செய்து வருவதால் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான `ரோல் கால்' எனப்படும் காவலர் வருகை அணிவகுப்பு இனிமேல் காலை 7 மணி என்பதற்கு பதிலாக 8 மணி என்று மாற்றி அமைக்கப்படும்.

இரண்டு, சென்னை மற்றும் மதுரை ஆகிய பெருநகரங்களில் பெண் காவலர்கள் தங்கு விடுதிகள் விரைவில் அமைக்கப்படும். மூன்று, அனைத்து காவல் நிலையங்களிலும் பெண் காவலர்களுக்கு என்று கழிவறை வசதியோடு தனி ஓய்வு வரை கட்டித் தரப்படும். நான்கு, பெண் காவலர்கள் காவல் நிலையங்களில் பணிக்கு வரும்போது தங்களது குழந்தைகளை தனியாக விட்டுவிட்டு வரக்கூடிய சூழ்நிலை உணர்ந்து சில மாவட்டங்களில் காவல் குழந்தைகள் காப்பகம் தொடங்கப்பட்டது. அதை முழு அளவில் மேம்படுத்தி செயல்படுத்தும் விதமாக விரைவில் தேவையான அனைத்து இடங்களிலும் காவல் குழந்தைகள் காப்பகம் அமைக்கப்படும்.

ஐந்து, பெண் காவல் ஆளிநர்களின் திறமையை முழுமையாக அங்கீகரிக்கும் விதமாக பெண்களை முதன்முறையாக காவல் பணியில் ஈடுபடுத்திய தலைவர் கலைஞர் அவர்களின் நினைவாக அவருடைய பெயரில் கலைஞர் காவல் பணி விருதும், கோப்பையும் ஆண்டு தோறும் வழங்கப்படும். ஆறு, ஆண் காவலர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெறும் இன்றைய சூழலில் பெண் காவலர்கள் குடும்ப தலைவிகளாக பல பொறுப்புகளை ஆற்ற வேண்டியிருப்பதால் அவர்களது குடும்ப சூழ்நிலைக்கேற்ப விடுப்பு பணியிட மாறுதல் வழங்குமாறு காவல் உயர் அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகள் வழங்கப்படும்.

மகளிர் காவலர்கள் பொன்விழா
மகளிர் காவலர்கள் பொன்விழா

ஏழு, பெண் காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் போட்டி தனியாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு விருதுகளும், பரிசுகளும் வழங்கப்படும். அதேபோல் தேசிய பெண் காவலர்களுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டிய தமிழ்நாட்டில் நடத்திட ஏற்பாடு செய்யப்படும். எட்டு, பெண் காவல் ஆளிநர்களின் தேவைகள், பிரச்சினைகள், செயல் திறன் பற்றி கலந்து ஆலோசனை செய்யும் விதமாக `காவல்துறையில் பெண்கள்' எனும் தேசிய மாநாடு ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் நடத்தப்படும். ஒன்பது, பெண் காவல் ஆளிநர்கள் தங்கள் பணிமுறையை மேலும் செம்மைப்படுத்திக் கொள்ளும்விதமாக குடும்பம் மற்றும் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளும்விதமாக டிஜிபி அலுவலகத்தில் பணி வழிகாட்டு ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்படும். இந்த அறிவிப்பு உங்கள் அனைவருக்கும் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தி தரும் என நம்புகிறேன். உங்களுடைய கரவொலி மூலமாக அதை நான் உணர்கிறேன்.

சட்டம் தான் உங்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு. அந்த சட்டத்தை நிலைநாட்ட உங்களது திறமையும், வீரமும், கருணையும் பயன்படட்டும். தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாடுகள் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கான தேவையான பங்களிப்பையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. இதன் மூலம் அமைதியான தமிழ்நாடு உருவாக உங்களது பணி உதவி செய்து வருகிறது. குற்றங்களை குறைக்கும் துறையாக மட்டுமில்லாமல் குற்றங்கள் நடைபெறாத சூழலை உருவாக்கும் துறையாக நீங்கள் இருக்க வேண்டும். அதற்கு பெண் காவலர்கள் பெரும் பங்கை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in