`தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவி கோரப்படும்'- பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் தகவல்

`தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவி கோரப்படும்'- பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் தகவல்

``மேன்டூஸ் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தமிழக முழுவதும் ஆய்வு மேற்கொண்டபின் தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவி கோரப்படும்'' என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை காசிமேட்டில் மீன்பிடித் துறைமுகத்தில் மேன்டூஸ் புயலால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட படகுகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று  ஆய்வு மேற்கொண்டு,  மீனவர்களுக்கு ஆறுதல் கூறி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

அதனைத்தொடர்ந்து  செய்தியாளர்களிடம்  பேசிய அவர்,  "அரசு திட்டமிட்டு பணியாற்றியதால் கடுமையான இந்த புயலில் இருந்து மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். இதற்காக பாடுபட்ட அமைச்சர்கள், மின்சாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள்,  மாநகராட்சி அதிகாரிகள்,  தூய்மைப் பணியாளர்களுக்கு  பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.  சென்னை மாநகரில் 17 ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.  5,000 பணியாளர்கள் நிவாரணப் பணியில் ஈடுபட்டனர்.  தற்போது 25 ஆயிரம் பணியாளர்கள் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று இரவு  11.30 மணியிலிருந்து 1.30 மணிக்குள் புயல் கரையை 70 கிலோமீட்டர் வேகத்தில் கடந்துள்ளது.  அரசின் திட்டமிடலால் பெரும் சேதம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதில்  4 உயிர்கள் பலியாகி உள்ளன.  98 கால்நடைகள்,  181 குடிசைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 3,179 குடும்பத்தில் உள்ள 9,130 பேர் 201 முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  16 குழுக்களாக 436 தேசிய மற்றும் மாநில மீட்பு படையினர் பணியில் உள்ளனர்.

சென்னை மாநகரில் 180 மரங்கள் விழுந்துள்ளன.  900 மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதனால்  சென்னை மாநகரிலுள்ள 22 சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கவில்லை.  இதனால் போக்குவரத்து ஏதும் பாதிக்கப்படவில்லை.  மின் கடத்திகள் சேதமானதால் 600 இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.  அதில் 300 இணைப்புகள் சீர் செய்யப்பட்டுள்ளது. 

முன்கூட்டியே திட்டமிட்டு பணியாற்றியதால் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.  முழு சேதம் அறிந்தபின் மத்திய அரசின் உதவி தேவைப்பட்டால் கேட்கப்படும்" என கூறினார்.  அவருடன் அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு,  மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி,  மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உட்பட பலரும் உடன் சென்றனர். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in