ஜாக்டோ-ஜியோ மாநாட்டுக்கு செல்கிறீர்களா?- உங்களுக்கு இதைப் படித்தால் உபயோகம்

ஜாக்டோ-ஜியோ மாநாட்டுக்கு செல்கிறீர்களா?- உங்களுக்கு இதைப் படித்தால் உபயோகம்

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ சார்பில் இன்று மாலை சென்னையில் வாழ்வாதாரக் கோரிக்கை மாநாடு நடைபெற இருக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். சுமார் ஐந்து லட்சம் பேர் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்புக்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜாக்டோ- ஜியோ மாநாட்டிற்கு தமிழகம் முழுவதும் இருந்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஏராளமாக திரளுவார்கள் என்பதால் அவர்களுக்கு வழிகாட்டும் வகையில் ஜாக்டோ- ஜியோ சார்பில் அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

“வாழ்வாதாரக் கோரிக்கை மாநாட்டிற்கு” வருகை தரும் இயக்கத் தோழர்கள் அனைவரும் சரியாக பிற்பகல் 2 மணிக்குள் மாநாடு நடைபெறும் தீவுத்திடலுக்கு வந்துவிடவேண்டும். 6 இடங்களில் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். மதியம் 2 மணியில் இருந்து கலை நிகழ்ச்சிகளுடன் விழா தொடங்கும். மாநாட்டில் அனைத்து சங்கத்தின் உயர்மட்டக்குழு உறுப்பினர்களும் பேச உள்ளனர்.

மாநாட்டு தீவுத்திடலுக்கு முன் கூட்டியே வருபவர்கள் அங்குள்ள வாகன நிறுத்தத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம். அங்கு முழுமையானால் அதன் பின்னர் திடலுக்கு முன் இயக்கத் தோழர்களை இறக்கிவிட்டு வாகனங்களை அருகில் உள்ள சிவானந்தா சாலை மற்றும் மெரினா கடற்கரை வாகன நிறுத்தம் ஆகிய இடங்களில் வாகனத்தை நிறுத்திக்கொள்ளலாம்.

தாம்பரம் மார்க்கமாக புறநகர் ரயிலில் வருபவர்கள் சென்னை கோட்டை நிறுத்தத்தில் இறங்கி சரியாக 1 கி.மீ தூரத்தில் மாநாட்டு திடலை அடையலாம். ஆட்டோ கட்டணம் அதிகப்பட்சம் ரூ.40. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சரியாக 1 கி.மீ தூரம். மெட்ரோ ரயிலில் வருபவர்கள் அரசினர் தோட்டம் நிறுத்தத்தில் இறங்கினால் அங்கிருந்தும் 1 கி.மீ தூரம் தான்.

எழும்பூர் ரயில் நிலையத்தில் இறங்குபவர்கள், அங்கிருந்து புறநகர் ரயிலில் மாறி சென்னை கோட்டையில் இறங்கவும். சென்னை கடற்கரை சாலை மார்க்கமாக பேருந்தில் வருபவர்கள் போர் நினைவுச் சின்னம் நிறுத்தத்தில் இறங்கினால் அங்கிருந்து 200 மீ. அண்ணா சாலை மார்க்கமாக வருபவர்கள் தீவுத்திடல் நிறுத்தத்தில் இறங்கலாம்.

சென்னை வரும்போதும், போகும்போதும் சுங்கச்சாவடியில் பணம் கட்ட தேவை இல்லை. உங்களின் பயணம் பாதுகாப்பாகவும் வெற்றியாக அமையட்டும். மாநாட்டை வெற்றி பெறச்செய்வோம். வாழ்வாதாரக் கோரிக்கைகளை வென்றெடுப்போம்" என்று ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in