முதலமைச்சர் எப்போதும் எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறார்: நெகிழும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள்

ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்
ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் எப்போதும் எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறார் என்று தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கம் பெருமிதம் தெரிவித்துள்ளது.

சென்னை தீவுத்திடலில் நேற்று நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் பங்கேற்று முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களைப் புகழ்ந்து பேசிய அவர்களுக்கான நலத் திட்டங்களையும் விரைவில் அறிவிப்பதாக கூறினார். இதனால் அரசு ஊழியர்கள் அகமகிழ்ந்து போயுள்ளனர்.

இந்த நிலையில் தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கம் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், ' முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் இன்னுயிர்த் தோழர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். கடந்த ஆட்சியில் பத்தாண்டுகளாக பட்ட காயங்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த முதலமைச்சர், விரைவில் முழு சிகிச்சையும் அளிப்பார் என்ற நம்பிக்கை மீண்டும் உறுதியாக தெரிகிறது.

கடந்த ஆட்சி காலத்தில் முன்னாள் முதலமைச்சரை சந்தித்து பேசுவதற்காகவே தமிழ்நாட்டின் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இயக்கம் நடத்தினர். அழைத்துப் பேசாதது மட்டுமல்ல, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களை கொச்சைப்படுத்தும், அவமானப் படுத்தும் பேச்சுகளை கடந்தகால முதலமைச்சர் பேசினார்.

ஆனால் இன்று ஆட்சிப் பொறுப்பில் உள்ள முதலமைச்சர் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களை பலமுறை அழைத்துப் பேசியதோடு மட்டுமின்றி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டிலும், ஜாக்டோ-ஜியோ மாநில மாநாட்டிலும் பங்கேற்று, தான் அளித்த வாக்குறுதிகளை மறக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை என்று கூறி இருக்கிறார்.

நீங்கள் பத்தாண்டுகள் பட்ட கஷ்டங்களை தீர்க்க கால அவகாசம் வேண்டும் என்று கூறியதோடு, உங்களில் ஒருவன், நிச்சயம் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று நேரடியாக அரசு ஊழியர்களை, ஆசிரியர்களை சந்தித்து பேசும் நம்பிக்கையளிக்கும் முதலமைச்சரை தலைவணங்கி, பாராட்டி வணங்குகின்றோம்.

அதேபோல், ஓய்வின்றி உழைத்துவரும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த ஆட்சிக் காலத்தில் பழி வாங்கப்பட்ட எமது சங்க மாநில பொதுச்செயலாளருக்கு, பழிவாங்கும் நடவடிக்கையை ரத்து செய்தார். அத்துடன் கடந்த ஆட்சியில் அதிகார மையம் எதிர்பார்த்ததை நிறைவேற்றாததால் 10 ஆண்டுகளாக பழிவாங்கப்பட்டு, மன உளைச்சல் அதிகமாகியிருந்த ஒட்டுமொத்த உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அனைவருக்கும் பணிப் பாதுகாப்பு ஆணை வழங்கி ஆணையிட்டார் என்பதை நன்றியுணர்வுடன் நினைவு கூருகின்றோம்.

ஜாக்டோ-ஜியோ மாநில மாநாட்டில் தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கம் சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளான 33 ஆண்டுகளாக பதவி உயர்வே இல்லாமல் பணியாற்றி பணி ஓய்வு பெறும் நிலையை மாற்றி உரிய பதவி உயர்வுகளை அளிக்க வேண்டும். இந்திய அளவில் உணவு பாதுகாப்பில் முதல் இடம் வகிக்க காரணமான உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அலுவலகங்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும்.

உணவு பாதுகாப்புத் துறை தனித்துறையாக செயல்பட உரிய உத்தரவுகளை விரைவில் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் எப்போதும் எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறார், நாங்களும் அவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக எப்போதும் நடந்து கொள்வோம். நம்பிக்கையே வாழ்க்கை என்று தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலக சங்கம் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in