
சிதம்பரத்தில் இரவு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்துள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவர் மகேந்திரன் (58). இவர் நேற்று இரவு பணியில் ஈடுபட்டிருந்தார். ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மகேந்திரனுக்கு இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலர் திடீர் உடல் நலக்குறைவால் மரணமடைந்த சம்பவம் காவல்துறை மற்றும் மகேந்திரன் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.