14 வயது மகளுக்கு திருமணம்; மணமகனை தேடும் போலீஸ்: சிக்கிய நடராஜர் கோயில் தீட்சிதர்

சிதம்பரம் நடராஜர் கோயில்
சிதம்பரம் நடராஜர் கோயில்

தனது மகளுக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் ஒருவர் போலீஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் மிகவும் புராண பெருமை வாய்ந்தது.  சைவர்களின் கோயில் என்று அழைக்கப்படும் இந்த கோயில் தற்போது அங்குள்ள பொது தீட்சிதர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.  கோயிலுக்கு என்று சில  கட்டுப்பாடுகளையும், மரபுகளையும்  வைத்துள்ளதுபோல தங்களுக்கான சில மரபுகளையும் அவர்கள் கடைபிடித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தங்கள் குழந்தைகளுக்கு  பால்ய விவாகம் செய்து வைப்பதையும் அவர்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பால்ய விவாகம் எதுவும்  நடைபெறாமல் இருந்தது.  இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் சோமசேகர தீட்சிதர் என்பவர் தனது 14 வயது மகளுக்கு திருமணம் செய்து வைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.  இது குறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் ஒன்று அளிக்கப்பட்டிருந்தது. 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் அந்தப் புகாரை டெல்டா பிரிவு போலீஸாரிடம் கொடுத்து விசாரிக்க செய்திருந்தார்.  டெல்டா பிரிவு போலீஸார்  விசாரணையில் குழந்தை திருமணம் செய்து வைத்தது உண்மை என்று தெரியவந்தது. இதையடுத்து நேற்று மாலை சோமசேகர தீட்சிதரை டெல்டா பிரிவு போலீஸார் கடலூர் அழைத்துச் சென்றனர்.  அதே நேரத்தில் குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயாரை மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் தனக்கு 14 வயதாக இருக்கும் போது திருமணம் செய்து வைக்கப்பட்டதை  சிறுமி ஒப்புக்கொண்டார்.  அதனையடுத்து குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ்  வழக்குப்பதிவு செய்யப்பட்டு,  சோமசேகர தீட்சிதர் கைது செய்யப்பட்டார்.  அத்துடன் சிறுமியை திருமணம் செய்த 23 வயது வாலிபர் மற்றும் அவரது உறவினர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர். 

தொடர்ந்து  தீட்சிதர்கள் மேல் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் பால்ய  விவாக குற்றச்சாட்டு காரணமாக கோயில் தீட்சிதர்  கைது செய்யப்பட்டு இருப்பது சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in