மாட்டு சிறுநீரை லிட்டருக்கு 4 ரூபாய் கொடுத்து வாங்கும் அரசு: எந்த மாநிலத்தில் தெரியுமா?

மாட்டு சிறுநீரை லிட்டருக்கு 4 ரூபாய் கொடுத்து வாங்கும் அரசு: எந்த மாநிலத்தில் தெரியுமா?

விவசாயிகள் மற்றும் கால்நடை உரிமையாளர்களிடம் இருந்து மாட்டு சிறுநீரை லிட்டரை 4 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய சத்தீஸ்கர் அரசு திட்டமிட்டுள்ளதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாட்டின் சிறுநீரை கொள்முதல் செய்யும் திட்டம் சோதனை அடிப்படையில் முதல்கட்டமாக அடுத்த இரண்டு வாரங்களில் சத்தீஸ்கர் மாநிலத்தின் வட மாவட்டங்களில் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கால்நடை வளர்ப்பை பொருளாதார ரீதியில் லாபகரமாக மாற்றும் நோக்கில் மாநில அரசு ஏற்கனவே கால்நடை வளர்ப்போரிடம் இருந்து மாட்டு சாணத்தை கொள்முதல் செய்து வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் மாட்டுச் சாணத்தைப் போலவே, மாட்டுச் சிறுநீரையும் வாங்க சத்தீஸ்கர் மாநில அரசு முடிவு செய்தது. அதைத் தொடர்ந்து, இதன் கொள்முதல் மற்றும் ஆராய்ச்சி முறையை முடிவு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. “குழுவின் முன்மொழிவு விரைவில் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும். மாட்டுச் சிறுநீரை லிட்டருக்கு ரூ.4 என்ற விலையில் கொள்முதல் செய்ய இந்தக் குழு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக முதலமைச்சரிடம் ஒப்புதல் பெறப்படும்” என்று சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேலின் ஆலோசகர் பிரதீப் சர்மா கூறினார்.

கிராம கவுதன் சமிதி மூலம் மாட்டு சிறுநீர் கொள்முதல் செய்யப்பட்டு, கால்நடை உரிமையாளர்களுக்கு இரு வாரங்களுக்கு ஒருமுறை பணம் வழங்கப்படும் என்றும் பிரதீப் சர்மா கூறினார். ஜூலை 28-ம் தேதி உள்ளூர் திருவிழாவான ஹிரேலியின் போது இந்த திட்டத்தை தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மாட்டுச் சாணத்தை கொள்முதல் செய்வதற்கான திட்டத்தைத் தொடங்கி மண்புழு உரம் தயாரிக்க அதிக அளவு மாட்டுச் சாணத்தை வாங்கியிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. இப்போது மாட்டு சிறுநீர் ஆர்கானிக் பூச்சிக்கொல்லிகள் மற்றும் பூஞ்சைக் கொல்லிகள் தயாரிப்புக்காக வாங்கப்படும் என்றும் அரசாங்கம் கூறியது.

இதற்கிடையில், மத்திய பாஜக அரசு செயல்படுவதைப் போலவே சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசும் செயல்படுகிறது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in