`அவரது பணிவால் ஈர்க்கப்பட்டேன்'- சூப்பர் ஸ்டாரை நேரில் சந்தித்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா!

`அவரது பணிவால் ஈர்க்கப்பட்டேன்'- சூப்பர் ஸ்டாரை நேரில் சந்தித்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா தனது பெற்றோருடன் சந்தித்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா. அண்மையில் ஆன்லைன் மூலம் நடைபெற்ற ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் உலகின் சிறந்த செஸ் ஆட்டக்காரரான கார்ல்சனை வீழ்த்தி ஒட்டுமொத்த உலகையே திகைப்பில் ஆழ்த்தினார் பிரக்ஞானந்தா. இதைத் தொடர்ந்து நடைபெற்ற நார்வே செஸ் குரூப் ஏ ஓபன் செஸ் போட்டியில் வென்று பட்டத்தை வென்றார் பிரக்ஞானந்தா.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஐஸ்லாந்தில் நடந்த செஸ் போட்டியில் பட்டத்தையும் வென்றிருக்கிறார் பிரக்ஞானந்தா. இதைத் தொடர்ந்து நடைபெற்ற செசபிள் மாஸ்டர்ஸ் இறுதிப்போட்டியில் சீன வீரரிடம் போராடி தோல்வியடைந்தார் பிரக்ஞானந்தா. டை பிரேக்கரில் வெற்றியை நழுவ விட்ட பிரக்ஞானந்தா, உலகின் முன்னணி செஸ் வீரர்களை வீழ்த்தி செசபிள் மாஸ்டர்ஸ் தொடரில் 2-வது இடம் பிடித்தார். இப்படி வெற்றிகளை குவித்து வரும் பிரக்ஞானந்தா, வரும் 28-ம் தேதி சென்னையில் நடக்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சாதனைகளை பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் பிரக்ஞானந்தா இன்று தனது பெற்றோருடன் சந்தித்தார். இதுகுறித்த படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பிரக்ஞானந்தா, நடிகர் ரஜினியை சந்தித்தது, வாழ்வில் மறக்க முடியாத சிறந்த நாளாகும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் எவ்வளவு உயரத்தில் சென்றாலும், அதை வெளிக்காட்டாமல் இருந்த அவரது பணிவால் ஈர்க்கப்பட்டதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in