
சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பின்னால் வந்த கார் மோதி கணவன் கண்முன்னே மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி காயம்பேடு பகுதியை சேர்ந்தவர் பிச்சைக்காரன் (65), அவரது மனைவி லட்சுமி (60) இருவரும் இன்று காலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் நீரிழிவு நோய்க்கான மாத்திரை வாங்க சென்றுள்ளனர். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கணவன்- மனைவி மீது பின்னால் வந்த கார் மோதியுள்ளது.
இந்த கோர விபத்தில் பின்னால் இருந்த மனைவி லட்சுமி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த கணவர் பிச்சைக்காரனை மீட்ட சக வாகன ஓட்டிகள் மற்றும் காவல்துறையினர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிக்காமல் சென்ற கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.