ஓடும் பேருந்தை நிறுத்தி இளைஞர்கள் குத்தாட்டம்: அதிர்ச்சி கிளப்பும் வைரல் வீடியோ

ஓடும் பேருந்தை நிறுத்தி இளைஞர்கள் குத்தாட்டம்: அதிர்ச்சி கிளப்பும் வைரல் வீடியோ

ஓடும் பேருந்தை மறித்து இளைஞர்கள் குத்தாட்டம் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

மழைக்காலங்களில் சென்னை மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். சில பகுதிகளுக்குக் குறைவான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. வேலைக்கு அவசர அவசரமாகச் செல்லக் கூடிய நிலையில் போக்குவரத்து மாற்றம், போக்குவரத்து நெரிசல் எனச் சென்னை மக்கள் படும் அல்லல்களைக் கேட்கவே வேண்டாம். இந்த சூழலில் சாலையில் செல்லும் பேருந்தை மறித்து, இடையூறு செய்யும் விதமாகக் குத்தாட்டம் ஆடினால் அதில் பயணம் செய்யும் பயணிகள் கொதித்துப் போவார்கள். அந்த வகையில் பூந்தமல்லி பகுதியில் செல்லும் மாநகர பேருந்து ஒன்றை இரண்டு இளைஞர்கள் வழிமறித்து குத்தாட்டம் போடுகிறார்கள். அதை அவர்களின் நண்பர் ஒருவரை விட்டு வீடியோவும் எடுத்து கெத்து காட்டுகிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களை வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது.

இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாகப் பலரும் தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். 'இப்படி பண்றது எல்லாம் விளையாட்டா நெனச்சு விட்டா ஒருநாள் பெரிய விபரீதமா முடியும். சென்னை காவல் துறைக்கு மழைக் காலத்தில் எவ்வளவோ வேலை இருக்கும். இதுல இவங்களையும் தட்டி வெச்சு, அவங்க வாயால் மன்னிப்பு காணொலி ஒன்னு போட்டு விடுங்க. அத பார்த்தாவது மத்துவங்களுக்குப் புத்தி வரட்டும்' என வேதனைப் பதிவுகளையும் காணமுடிகிறது. இந்தப் பதிவிற்கு, 'தங்கள் பதிவுக்கு நன்றி. தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்' என சென்னை போலீஸ் தரப்பில் பதிவிடப்பட்டுள்ளது. ‘ரூட் தல’ போன்று இந்த சம்பவங்களையும் சென்னை காவல்துறையினர் கடுமையாகக் கையாண்டால்தான் இது போன்ற சிரமங்கள் குறையும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in