வீட்டு வாசலில் நிறுத்தியதால் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கியவரிடம் விசாரணை நடத்தச் சென்றபோது காவலர்களை கட்டையால் தாக்கியதோடு, கன்னத்தில் அறைந்தார். தாக்குதல் நடத்தியவர் மீது 7 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை மேற்கு மாம்பலம் சக்கரபாணி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சிந்து(37). இவரது மகள் கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை சிந்து தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக காரில் சென்றுள்ளார். பின்னர் கே.கே.நகர் 4-வது செக்டர் 20-வது தெருவில் காரை நிறுத்திவிட்டு பள்ளிக்கு சென்று மகளை அழைத்து வந்து பார்த்தபோது காரின் முன்பக்க கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சிந்து, இது குறித்து வீட்டு உரிமையாளரிடம் கேட்டுள்ளார்.
அதற்கு, காரை ஏன் வீட்டு வாசலில் நிறுத்தினீங்க என கேட்டு, சிந்துவை தகாத வார்த்தையால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சிந்து உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கே.கே.நகர் காவல் நிலைய காவலர் விஜயராஜ், வீட்டு உரிமையாளரிடம் விசாரிக்க முயன்ற உடனே அந்த நபர் காவலரை ஆபாசமாக பேசி உருட்டுக்கட்டையால் தாக்கி, கன்னத்தில் அறைந்தார். பின்னர் போலீஸார் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அரவிந்த்(40) என்பதும் இவர் ஏற்கெனவே தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக மத்திய குற்றபிரிவு சைபர் க்ரைம் போலீஸாரால் கைதாகி சிறைக்கு சென்றவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அரவிந்த் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல், பணி செய்யவிடாமல் தடுத்தல் உட்பட 7 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.