
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ உடற்கல்வியல் கல்லூரியில், கல்லூரி முதல்வர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும், கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினாலும், கல்லூரியில் படிப்பதற்கு அதிக பணம் வசூலிப்பதாகவும், 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ- மாணவிகள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மூன்று மாத காலத்திற்கு முன்பு சென்னை நந்தனம் ஓஎம்சிஏ உடற்கல்வியல் கல்லூரியின் முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் என்பவர் கல்லூரி பெண்களுக்கு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பாக காவல்துறையில் பலமுறை புகார் கொடுத்தும் காவல்துறை சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மாணவ- மாணவிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
உடனே புகாரை எடுத்த காவல்துறையினர் குற்றம்சாட்டப்பட்ட கல்லூரியின் முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் என்பவரை விசாரணைக்கு அழைத்து செல்வதுபோல் அழைத்து சென்று எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, மறுபடியும் கல்லூரியில் பணிபுரிய வந்ததும் மாணவ- மாணவிகளை மிரட்டல் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மாணவ- மாணவிகள் கல்லூரி முதல்வரை கைது செய்ய வலியுறுத்தி கல்லூரி வளாகத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும் கல்லூரியில் படிப்பதற்கு அதிக பணம் வசூலிப்பதாகவும் இதற்கெல்லாம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் என மாணவ -மாணவிகள் தெரிவித்துள்ளனர்.