சென்னையைச் சேர்ந்த பெண் தலைமைக் காவலர் ஒருவர் சர்வதேச காவல் துறை தடகள போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களை பெற்றுள்ளது காவல் துறை வட்டாரத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் காவல் துறை, தீயணைப்பு, மீட்பு படையினருக்கான 'போலீஸ் அண்ட் ஃபயர்' விளையாட்டு போட்டிகள் கனடாவின் வின்னிபெக் நகரில் ஜூலை 28-ம் தேதி தொடங்கி கடந்த 6-ம் தேதி வரை நடந்தன. இதில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து காவல், தீயணைப்பு உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 8,500-க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்த போட்டியில், தமிழகத்தில் இருந்து பங்கேற்ற குழுவில் சென்னையில் உள்ள நவீன காவல் கட்டுப்பாட்டு அறையின் காவல் கரங்கள் பிரிவில் தலைமை காவலராக பணியாற்றும் லீலாஸ்ரீயும் கலந்து கொண்டார். அங்கு நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டம், 800 மீட்டர் ஓட்டம்,100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய 7 போட்டிகள் கொண்ட 'ஹெப்டத்லான்' பிரிவில் கலந்து கொண்ட அவர் அசத்தலாக விளையாடி தங்கம் வென்றார்.
400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும், உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார். அவர் மூன்று பதக்கங்கள் பெற்று காவல் துறைக்கு பெருமை சேர்த்துள்ளதை அடுத்து அவருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.