சென்னை பல்கலை சிண்டிகேட் தேர்தல்; தனியார் கல்லூரி முதல்வர்களின் மனுக்கள் நிராகரிப்பு: கொந்தளித்த பேராசிரியர்கள்

பேராசியர் தாமோதரன்
பேராசியர் தாமோதரன்

சென்னை பல்கலை சிண்டிகேட் தேர்தலில் தனியார் கல்லூரி முதல்வர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக வளாகத்தில் பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் குழுவில் காலியாக உள்ள 4 உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 10 தனியார் கல்லூரிகளை சேர்ந்த முதல்வர்கள் விண்ணப்பத்திருந்தனர். இவர்களின் விண்ணப்பங்கள் 7-ம் தேதி தகுதியான வேட்பு மனுக்கள் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வேட்பு மனுக்களை வாபஸ் பெற நேற்று மாலை வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று மாலை வெளியிடப்பட்ட இறுதி வேட்பாளர் பட்டியலில் சென்னை கௌரிவாக்கம் மற்றும் பொன்னேரியில் உள்ள இரண்டு தனியார் கலைக் கல்லூரி முதல்வர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் பேராசிரியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து பேசிய பல்கலைக்கழக ஆசிரியர் சங்க நிர்வாகி தாமோதரன், எந்த விதிமுறைகளும் இல்லாமல் தனியார் கல்லூரிகளின் பிரதிநிதித்துவத்தை தடுக்கும் வகையில் 2 கல்லூரி முதல்வர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு முதல்வர் பல்கலைக்கழக குழுவில்(Academic standing council) இடம் பெற்றுள்ளார். பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கல்லூரியின் முதல்வரை எப்படி தேர்தலில் இருந்து தகுதியற்றவர் என நீக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

மற்றொரு பேராசிரியர் சேட்டு பேசுகையில், "பல்கலைக்கழக மானியக் குழுவின் உத்தரவுப்படி சம்பளம் பெறாததால் முதல்வர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக துணைவேந்தர் பதிலளித்துள்ளார். ஆனால் அது போன்று எந்த விதிமுறைகளும் தேர்தல் நடத்தையில் கூறப்படவில்லை. ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள் திடீரென மற்றொரு நாளில் எப்படி நிராகரிக்க முடியும். இதற்கு முன்பாகவும் தனியார் கல்லூரி முதல்வர்கள் பலரும் சிண்டிகேட், செனட் குழுவில் உறுப்பினராக இருந்தனர்" என்று கூறினார்.

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி

இதுகுறித்து விளக்கம் அளித்த சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி, "தனியார் கல்லூரிகள் பலவும் தங்களுடைய முதல்வர்களுக்கு யுஜிசி உத்தரவுப்படி சம்பளம் வழங்குவதில்லை. அவர்களை சிறப்பு விரிவுரையாளர் என்ற நிலையிலும் தற்காலிக முதல்வர்களாக நியமிப்பது போல காட்டுகின்றனர். குறிப்பிட்ட இரண்டு முதல்வர்களுக்கும் ஒரு மாதத்திற்கு சரியான சம்பளம் கொடுக்கப்பட்டதாக காட்டப்பட்டது. கால அவகாசம் முடிந்த பின்பு அவர்கள் மீண்டும் காலஅவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். அவர்கள் தங்களுடைய கல்லூரிகளில் நிர்வாகத்திடம் பேசி சரியான சம்பளத்தை கொடுக்க வலியுறுத்தினாலே இதுபோன்ற பிரச்சினை வராது" என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in