ரத்த வெள்ளத்தில் கிடந்த மகன்; கதறிய தாய்: சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த சோகம்

ரத்த வெள்ளத்தில் கிடந்த மகன்; கதறிய தாய்: சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த சோகம்

தேர்வு எழுதச் செல்லுமாறு தாய் கூறியதால் 11-ம் வகுப்பு மாணவன் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தி.நகர் தாமஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சுமி(47). இவர் தனது கணவர் ராஜாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனது மகன் ஹரிஷ் (15) உடன் தனியாக வசித்து வருகிறார். மகன் ஹரிஷ் கோபாலபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு அறிவியல் பிரிவில் படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரம் தூங்கிக் கொண்டிருந்த ஹரிஷை தேர்வு உள்ளதால் பள்ளிக்குச் செல்லுமாறு தாய் சுமி வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது ஹரிஷ் பள்ளிக்குச் செல்லமாட்டேன், தேர்வு எழுதமாட்டேன் என தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 ஹரிஷ்
ஹரிஷ்

இதன் பின்னர் அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடிக்குச் சென்ற ஹரிஷ் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதை பார்த்த காவலாளி, ஹரிஷின் தாய் சுமிக்கு தகவல் தெரிவித்தார். தகவல் கேட்டு ஓடிவந்த தாய் சுமி, ரத்த வெள்ளத்தில் ஹரிஷ் கிடந்ததை கண்டு கதறி அழுதார். இதன் பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஹரிஷை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு ஹரிஷை பரிசோதித்த செய்த மருத்துவர்கள் பின்தலையில் பலத்த காயமடைந்த ஹரிஷ் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்துடன், ஹரிஷின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் அடிப்படையில் மாம்பலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 3-வது மாடியில் இருந்து குதித்து ஹரிஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர் மற்றும் குடியிருப்பு வாசிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாணவன் தற்கொலை செய்துக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு
மாணவன் தற்கொலை செய்துக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in