
ரோகிணி தியேட்டரில் உள்ள தண்ணீர் தொட்டியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேடு பகுதியில் ரோகிணி தியேட்டர் செயல்பட்டு வருகிறது. இன்று மதியம் தியேட்டரில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக ராமமூர்த்தி என்பவர் வந்துள்ளார். பின்னர் ராமமூர்த்தி தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தபோது துர்நாற்றம் வீசியதுடன் அதில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதை பார்த்து பதறிபோய் உடனே தியேட்டர் மேலாளரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் தியேட்டர் மேலாளர் இது குறித்து கோயம்பேடு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கு வந்த போலீஸார் தண்ணீர் தொட்டியில் அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், தண்ணீர் தொட்டியில் சடமாக மீட்கபட்ட நபர் பூந்தமல்லி ஆஞ்சநேயர் கோயில் தெருவை சேர்ந்த வெங்கடேச பெருமாள் (42) என்பது தெரியவந்தது. ரோகிணி தியேட்டரில் பிளம்பராக வேலை பார்த்து வந்த இவர், கடந்த 26-ம் தேதி மதுபோதையில் பணிக்கு வந்ததும் மறுநாளில் இருந்து பணிக்கு வராதததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து போலீஸார் சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த வெங்கடேச பெருமாள் மது போதையில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? எதற்காக அவர் தண்ணீர் தொட்டிக்கு சென்றார் என்பது குறித்து தியேட்டர் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ரோகிணி தியேட்டரில் ஊழியர் ஒருவர் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சக ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.