பணம் இரட்டிப்பு ஆசையால் 60 லட்சம் பறிபோனது: சென்னை மேலாளரை தேனிக்கு வரவழைத்து பதறவைத்த கும்பல்

கும்பல்
கும்பல் பணம் இரட்டிப்பு ஆசையால் 60 லட்சம் பறிபோனது: சென்னை மேலாளரை தேனிக்கு வரவழைத்து பதறவைத்த கும்பல்

சென்னையில் உள்ள தனியார் நிறுவன மேலாளரிடம் பணம் இரட்டிப்பு ஆசை காட்டி பணத்துடன் தேனி வந்தவரிடம் 60 லட்சத்தை கத்தி முனையில் பறித்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டம், பனையாகோட்டையைச் சேர்ந்தவர் வெள்ளைப்பன். இவர் சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள தனியார் நிறுவன மேலாளராக உள்ளார். இந்நிறுவன ஊழியர் விஜயகுமார். இவரது நண்பர் கோவிந்தன். இவர்கள் 2 பேரும் வெள்ளைப்பனை கடந்த மாதம் சந்தித்து பண இரட்டிப்பு குறித்து ஆசைவார்த்தை கூறினர்.

இந்த பண பரிமாற்றங்களை தேனி மாவட்டம், வீரபாண்டியில் உள்ள தனது நண்பர்கள் மூலம் ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறினர். இது தொடர்பாக கடந் ஒரு வாரமாக வெள்ளையப்பனை செல்போனில் தொடர்பு கொண்டு பணம் ஏற்பாடு செய்ய நச்சரித்தனர். இதை முற்றிலும் நம்பிய வெள்ளையப்பன், தனது நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட சிலரிடம் 60 லட்சத்தை வெள்ளையப்பன் ஏற்பாடு செய்தார்.

இதையடுத்து பிப். 4-ம் தேதி கார் மூலம் தேனிக்கு கிளம்பிய வெள்ளைப்பன் தனது நிறுவன உரிமையாளர் மற்றும் நிறுவன ஊழியர்கள் சிலரை உடன் அழைத்து வந்தார்.

பிப்.5-ம் தேதி தேனி வந்த வெள்ளைப்பன், பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த விஜயகுமார், கோவிந்தன் ஆகியோரை காரில் ஏற்றிக்கொண்டார். இதன்பின் வீரபாண்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை செல்போனில் விஜயகுமார் அழைத்தார். கார்த்திக் தனது நண்பர்கள் சிலரை உடன் அழைத்து வந்தார். 60 லட்சம் கொண்டு வந்ததை உறுதிப்படுத்தினர். இதன்பின்னர், கார்த்திக் அறிவுறுத்தல்படி கண்டமனூர் அருகே தேக்கம்பட்டி அரசு பாலிடெக்னிக் பகுதிக்கு வெள்ளைப்பன் காரில் சென்றார்.

அப்போது மற்றொரு காரில் தனது நண்பர்களுடன் வந்த கார்த்திக் மேலாளர் வெள்ளையப்பன், நிறுவன உரிமையாளர் ஆகியோரை காரில் ஏற்றிக்கொண்டார். சிறிது தூரம் ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு சென்றபோது கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் கத்தி முனையில் வெள்ளைப்பன் கொண்டு வந்த 60 லட்சத்தை வழிப்பறி செய்தனர். இதுபற்றி வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என மிரட்டல் விடுத்து தப்பினர்.

இது குறித்து போலீஸில் வெள்ளைப்பன் புகாரளித்தார். இதன்படி கண்டமனூர் போலீஸார் துரித விசாரணை செய்து பண இரட்டிப்பு ஆசை காட்டி 60 லட்சத்தை வழிப்பறி செய்த வீரபாண்டியைச் சேர்ந்த கார்த்திக், சண்முகம், யுவன் ஆகியோரை கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in