ஆபாச பேச்சு; கட்டிப்புரண்டு சண்டை: சாலையில் காவல் அதிகாரிகளின் மோதலால் பதறிய மக்கள்

ஆபாச பேச்சு; கட்டிப்புரண்டு சண்டை: சாலையில் காவல் அதிகாரிகளின் மோதலால் பதறிய மக்கள்

சென்னையில்  போக்குவரத்து நெரிசலைச் சரிசெய்வதில் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் இடையே ஏற்பட்ட மோதலில் நடுரோட்டில் இருவரும் கட்டி புரண்டு சண்டையிட்டுள்ளனர். இதையடுத்து அந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை, கேகே நகரில் நேற்று இரவு 12G பேருந்தில்  மதுபோதையில் சிலர் பயணம் செய்துள்ளனர். அப்போது  மதுபோதையில் பயணம் செய்த நபர்கள் தாங்கள் இறங்க வேண்டிய  கே.கே நகர் பேருந்து நிறுத்தத்தில் இறங்காமல் தொடர்ந்து பயணம் செய்தனர். பின்னர் கே.கே நகர்ப் பகுதியைப் பேருந்து கடந்து செல்லும் போது போதை ஆசாமிகள் உடனே பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் வேம்புலி அம்மன் பேருந்து நிலையம் வரை ஓட்டி சென்றதால் கோபமடைந்த போதை ஆசாமிகள், ஓட்டுநரை ஆபாசமாகத் திட்டி விட்டு கீழே இறங்கிச் சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுநர் ஆறுமுகம் ஆற்காடு சாலை சந்திப்பில் பேருந்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்ததின் பேரில் இணை ஆணையர், கே.கே.நகர் காவல் ஆய்வாளர் பிரபுவிடம் சம்பவ இடத்திற்குச் செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார். ஆனால் காவல் ஆய்வாளர் பிரபுவோ, உதவி ஆய்வாளர் செந்தில்குமாரை சம்பவ இடத்திற்குச் செல்ல கூறியதாகத் தெரிகிறது.  சுமார் 30 நிமிடத்திற்கும் மேலாக  கே.கே.நகர் காவல் நிலைய போலீஸார் சம்பவயிடத்திற்கு செல்லாததால், எம்.ஜி.ஆர் நகர் போலீஸார் விரைந்து சென்று  ஓட்டுநரைச் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து கே.கே நகர் காவல் ஆய்வாளர் பிரபு சம்பவயிடத்திற்கு வந்து தாமதமாக வந்த உதவி ஆய்வாளர் செந்தில்குமாரை நடுரோட்டில் ஆபாசமாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது. ஆபாசமாகப் பேசியதால் ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் செந்தில், பதிலுக்கு ஆய்வாளரை ஆபாசமாகத் திட்ட வாக்குவாதம் முற்றி பொதுமக்கள் முன்பே இருவரும் கட்டி புரண்டு சண்டையிட்டுக்கொண்டனர். அங்கிருந்த மற்ற போலீஸார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த மோதல் சம்பவம் தொடர்பாக  வடபழனி உதவி ஆணையர் தலைமையில் காவல் ஆய்வாளர் பிரபு மற்றும் உதவி ஆய்வாளர் செந்தில்குமாரிடம் துறை ரீதியான விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in