
சென்னையில் நேற்று நடந்த சிறப்புச் சோதனையில் தடைச் செய்யப்பட்ட போதை பொருட்களான குட்கா, கஞ்சா, சிகரெட் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து, 25 நபர்களை கைது செய்துள்ளனர்.
சென்னையில் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை சென்னை பெருநகர போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் போதைப் பொருட்களுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனை போலீஸார் பல்வேறு இடங்களில் மேற்கொண்டனர்.
சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரி உட்பட கல்வி நிறுவனங்களுக்கு அருகில் மற்றும் இதர இடங்களில் சாதாரண உடையில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை வைத்திருந்த 3 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்து150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல தமிழக அரசால் தடைச் செய்யப்பட்ட மாவா, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 22 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர் அவர்களிடம் இருந்து3 கிலோ 240 கிராம் கஞ்சா, 252 சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போலீஸாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.