ஆர்ப்பாட்டம், பேரணி நடத்த தடை: சென்னை காவல் ஆணையர் அறிவிப்பால் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு சிக்கலா?

ஆர்ப்பாட்டம், பேரணி நடத்த தடை: சென்னை காவல் ஆணையர் அறிவிப்பால் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு சிக்கலா?

சென்னையில் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்த பதினைந்து நாட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகச் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 2-ம் தேதி தமிழகத்தில் 50 இடங்களில் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு முடிவு செய்திருந்த நிலையில், அதற்குத் தமிழகக் காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் பேரணி நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பாகப் பேரணி நடத்த அனுமதி கேட்டுக் கொடுக்கப்பட்ட மனுவை காவல்துறை மீண்டும் நிராகரித்தது. மேலும், விசிக சார்பில் நடைபெற இருந்த மனிதச் சங்கிலிக்கும் காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை.

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்குச் சொந்தமான இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்ற பிறகு தமிழகம் முழுவதும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. இந்நிலையில், மீண்டும் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பாகப் பேரணிக்கு அனுமதி வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த பதற்றமான சூழலில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நவம்பர் 6-ம் தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை நடத்தும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும்  அதற்கு காவல்துறை அனுமதி வழங்கவும் உத்தரவிட்ட நீதிபதி, அனுமதி மறுத்தால் காவல்துறை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்தார். இதையடுத்து ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்தும் பேரணிக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சென்னையில் இன்றிலிருந்து அக்டோபர் 15-ம் தேதி இரவு வரை ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணிக்குத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in