‘நச்சு வாயுக் கசிவுக்குத் தீர்வு காணும் வரை உற்பத்தியை சிபிசிஎல் நிறுவனம் நிறுத்த வேண்டும்!’

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரிக்கு கனிமொழி எம்.பி கடிதம்
‘நச்சு வாயுக் கசிவுக்குத் தீர்வு காணும் வரை உற்பத்தியை சிபிசிஎல் நிறுவனம் நிறுத்த வேண்டும்!’

திருவொற்றியூர், மணலி பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் நச்சு வாயுக் கசிவுக்குத் தீர்வு காணும்வரை சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் (சிபிசிஎல்) உற்பத்தியை நிறுத்திவைக்க வேண்டும் என்று திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியிருக்கிறார். இதுதொடர்பாக, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சரான ஹர்தீப் சிங் புரிக்கு அவர் கடிதம் எழுதியிருக்கிறார்.

கடந்த ஒரு மாதமாக, சென்னை திருவொற்றியூர், மணலி பகுதிகளில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திலிருந்து நச்சு வாயு கசிந்துவருவதால், அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகியிருக்கிறார்கள். கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்துவரும் அந்நிறுவனத்திலிருந்து வெளியேறிய வாயு, கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்தியதுடன், அப்பகுதி மக்களுக்குப் பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள் அப்பகுதியில் ஆய்வு நடத்தினர். வாயு கசிவு ஏற்படுவதற்கான காரணத்தை அறியவும், கசிவை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு நடத்தவும் தொழில்நுட்பக் குழுவையும் தமிழக அரசு அமைத்தது. சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனம், உற்பத்தியை 75 சதவீதமாகக் குறைக்கவும் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.

இந்நிலையில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சரான ஹர்தீப் சிங் புரிக்கு திமுக எம்.பி கனிமொழி கடிதம் எழுதியிருக்கிறார்.

திருவொற்றியூர், மணலி பகுதிகளில் வசிக்கும் மக்கள், திரவ பெட்ரோலிய வாயுவைப் போன்ற நாற்றத்தை உணர்வதாகவும், இதன் காரணமாக ஆபத்தான விளைவுகள் ஏற்படும் என அவர்கள் அச்சப்படுவதாகவும் அந்தக் கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மேலும், ‘அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழுவை ஜூலை 21-ல் தமிழக அரசு அமைத்தது. வாயுக் கசிவின் காரணம், வாயுவின் தன்மை, சுற்றுச்சூழலில் அது ஏற்படுத்தும் பாதிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்ய அக்குழு அமைக்கப்பட்டது. மறுநாளே அங்கு சென்று ஆய்வு நடத்திய அக்குழு, ஜூலை 27-ல் தனது ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தது.

அக்குழு நடத்திய ஆய்வின் அடிப்படையில், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திலிருந்து வாயு கசிந்தது தெரியவந்தது. அது ஆபத்தான ’ஹைட்ரஜன் சல்ஃபைடு’ (ஹெச்2எஸ்) என சந்தேகிக்கப்படுகிறது. இந்த வாயு குழந்தைகளின் மூளையில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், பெரியவர்களின் உடல்நலத்தில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, வாயுக் கசிவை நிறுத்துமாறு சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துக்கு நிபுணர் குழு பல முறை பரிந்துரைத்தது. ஆனால், இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை அந்நிறுவனம் உணர மறுப்பதுடன், எவ்விதப் பதற்றமும் இன்றி செயல்படுவதுதான் வேதனை அளிக்கிறது.

திருவொற்றியூர், மணலி பகுதிகளில் இன்றும்கூட வாயுக் கசிவு உணரப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் 7-ம் தேதி காலை 8 மணிக்கு டி.கே.எஸ்.நகர், காமதேவன் நகர் பகுதிகளில் வாயுக் கசிவு அதிகரித்தது அங்கு வசிக்கும் மக்களை பீதியில் ஆழ்த்தியது.

எனவே, திருவொற்றியூர், மணலி பகுதிகளில் நச்சு வாயுக் கசிவு ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் குறித்து நிபுணர் குழு அளித்த பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு, வாயுக் கசிவுக்குத் தீர்வு காணும் வரை சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் (சிபிசிஎல்) உற்பத்தியை நிறுத்திவைக்க வேண்டும்’ என்று அக்கடிதத்தில் கனிமொழி வலியுறுத்தியிருக்கிறார்.

இதுதொடர்பாக நிபுணர் குழு அளித்த பரிந்துரைகளின்படி, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரியை அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in