சாதி பெயரிட்டு திட்டிய ஆசிரியர்: துறை நடவடிக்கைக்கு தடை விதித்தது நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

உடன் பணியாற்றியவரை சாதி பெயரிட்டு திட்டியதாக, ஆசிரியருக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலுார் மாவட்டம், இடைச்செருவாய் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உதவி ஆசிரியரான சிவக்குமார், குடி போதையில் பள்ளிக்கு வந்ததோடு, ஜாதி பெயரை சொல்லி தம்மை தகாத வார்த்தைகளில் பேசியதாக, அதே பள்ளியில் பணியாற்றிய ஆசிரியை சாந்தி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகாரளித்தார்.

புகாரை விசாரித்த ஆணையம், பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு இழப்பீடு வழங்கவும், ஆசிரியர் சிவக்குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் கடந்தாண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது. மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, ஆசிரியர் சிவக்குமார் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது

நீதிபதிகள் வேலுமணி, ஹேமலதா அமர்வில் அந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ’மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பதில் மனுத்தாக்கல் செய்த நிலையில், அதனை கவனத்தில் கொள்ளாமல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஜூலை மாதம் உத்தரவிடப்பட்டதாக’ ஆசிரியர் சிவக்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரிக்க மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.

மேலும் வழக்கு விசாரணையை விரைந்து முடிக்குமாறும் மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அதுவரை ஆசிரியர் சிவக்குமார் மீது மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in