நளினி விடுதலை தீர்மானம்: தலைமை வக்கீல் கூறாத கருத்துகளை நீக்க ஐகோர்ட் அதிரடி உத்தரவு

நளினி விடுதலை தீர்மானம்: தலைமை வக்கீல் கூறாத கருத்துகளை நீக்க ஐகோர்ட் அதிரடி உத்தரவு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான தீர்மானத்தை, ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சரி என அரசு தரப்பில் வாதிட்டதாகப் பதிவு செய்யப்பட்ட கருத்துகளை நீக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்ய அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அதை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

இதையடுத்து, ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனுத்தாக்கல் செய்திருந்தார். கடந்த 17-ம் தேதி இந்த மனுவின் மீது தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அமர்வு விசாரணை செய்தது. தமிழ்நாடு அரசுத் தரப்பில் தெரிவிக்காத கருத்துக்கள் மற்றும் வாதங்கள் இடம் பெற்றுள்ளதாகவும், அந்த பகுதியை நீக்க வேண்டும் என்றும் உள்துறை இணை செயலாளர் அந்த வழக்கில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

உள்துறை இணைச் செயலாளர் தாக்கல் செய்துள்ள மனுவில், “நளினியை விடுதலை செய்ய வேண்டும் என்ற அமைச்சரவை தீர்மானத்தை, குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தது சரி என்று தலைமை வழக்கறிஞர் தன் வாதத்தில் கூறியதாகத் தீர்ப்பில் உள்ளது. ஆனால் அவர் அப்படி எதுவும் கூறவில்லை. மேலும், அமைச்சரவை தீர்மானத்துக்கு ஒப்புதல் அளித்து, ஆளுநரோ அல்லது குடியரசுத் தலைவரோ கையெழுத்திடவில்லை என்றால், நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது எனத் தலைமை வழக்கறிஞர் கூறியதாகத் தீர்ப்பில் உள்ளது. இந்த கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. அதனால் நளினி மனு மீதான தீர்ப்பைத் திருத்த வேண்டும். தலைமை வழக்கறிஞர் கூறாத வாதங்களைத் தீர்ப்பிலிருந்து நீக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு, அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்ததாகப் பதிவு செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்கி உத்தரவிட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in