
வீட்டில் உள்ள அறையை உள்பக்கமாக தாழிட்டு கொண்டு திறக்க முடியாமல் தவித்த சிறுவனை 10 நிமிடத்தில் மீட்டு தீயணைப்பு வீரர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
அமெரிக்கா வாழ் குடியுரிமை பெற்ற ஸ்ரீ கிருஷ்ணன் தம்பதியினர் சில தினங்களுக்கு முன்பு சென்னை அடையாறு சாஸ்திரி நகர் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளனர். இன்று காலை வீட்டின் படுக்கையறையில் விளையாடி கொண்டிருந்த ஸ்ரீ கிருஷ்ணனின் மகன் விது, தெரியாமல் உள்பக்கமாக கதவை தாழிட்டு கொண்டு மீண்டும் திறக்க முடியாமல் போகவே கூச்சலிட்டு அழுதுள்ளான். மகனின் அலறல் சத்தம் கேட்டு பதறிபோன பெற்றோர் அறையில் சிக்கி கொண்ட விதுவை மீட்க போராடியும் கதவை திறக்க முடியாததால், உடனடியாக தீயணைப்பு துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே அங்கு விரைந்து வந்த மயிலாப்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர், உபகரணங்களை பயன்படுத்தி கதவை உடைத்து அறையில் சிக்கி தவித்த சிறுவனை பத்திரமாக 10 நிமிடத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து தீயணைப்பு வீரர்களுக்கு பெற்றோர் தங்களது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.