அரை நிர்வாணமாக்கி இரவு முழுவதும் தாக்குதல்; உயிரிழந்த ஊழியர் எரித்துக்கொலை: சரணடைந்த சினிமா பைனான்சியர்

எரித்துக்கொல்லப்பட்ட பாபுஜி
எரித்துக்கொல்லப்பட்ட பாபுஜி அரை நிர்வாணமாக்கி இரவு முழுவதும் தாக்குதல்; உயிரிழந்த ஊழியர் எரித்துக்கொலை: சரணடைந்த சினிமா பைனான்சியர்

சினிமா பைனான்சியர் வீட்டில் நகை, பணத்தை திருடிய ஊழியரை கடத்தி சென்று எரித்து கொன்ற பைனான்சியர் உட்பட மூன்று பேர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.

சென்னை நொளம்பூர் எஸ்பி கார்டன் பகுதியை சேர்ந்தவர் சினிமா பைனான்சியர் சோட்டா வெங்கட்ராமன்(48). சினிமா பைனான்சியரும், காங்கிரஸ் பிரமுகருமான இவர் நேற்று இரவு தன்னிடம் கலெக்சன் ஏஜென்ட்டாக வேலை பார்த்து வரும் இரு ஊழியர்களுடன் நொளம்பூர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். மேலும் தன்னிடம் வேலை பார்த்து வந்த பாபுஜி என்பவரை கொலை செய்து, உடலை எரித்து விட்டதாகவும், போலீஸில் சிக்கி விடுவோமோ என்ற அச்சத்தில் சரணடைவதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த நொளம்பூர் போலீஸார், மூவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கொலையான பாபுஜி(50) அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், இவர் கடந்த 7 மாதங்களாக சோட்டா வெங்கட்ராமனிடம் கலெக்சன் ஏஜென்டாக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. பாபுஜி பைனான்சியர் சோட்டா வெங்கட்ராமனிடம் கடனாக 2 லட்ச ரூபாயும், அவரது வீட்டில் இருந்து சிறுக சிறுக 21 கிராம் தங்க நகையை திருடியதாகவும், பணம் மற்றும் நகையை திருப்பி கேட்டபோது அதனை தராமல் இழுத்தடித்த பாபுஜி, சோட்டா வெங்கட்ராமனை பற்றி எல்லோரிடத்திலும் அவதூறாக பேசி வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சோட்டா வெங்கட்ராமன் இது குறித்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நொளம்பூர் காவல் நிலையத்தில் பாபுஜி மீது புகார் அளித்துள்ளார்.

சினிமா பைனான்சியர் 
 சோட்டா வெங்கட்ராமன்
சினிமா பைனான்சியர் சோட்டா வெங்கட்ராமன்

புகாரின் பேரில் போலீஸார் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தி, பாபுஜியிடம் பணத்தை திரும்ப கொடுக்குமாறு கூறி இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். போலீஸார் கூறிய போல் பாபுஜி பணத்தை தராமல் தலைமறைவானதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பாபுஜி கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே பிரபல ஓட்டல் அருகே நின்றிருந்ததை பார்த்த சோட்டாவின் நண்பர் நவீன் உடனே சோட்டா வெங்கட்ராமனுக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே சோட்டா தனது ஊழியர்களான சரவணன், திலிப் ஆகியோருடன் காரில் சென்று அங்கு நின்றிருந்த பாபுஜியை தாக்கி காரில் கடத்தி கொண்டு நொளம்பூரில் உள்ள தனது வீட்டிற்கு கொண்டு வந்து வீட்டின் இரண்டாவது தளத்தில் உள்ள தனி அறையில் அடைத்து வைத்து, அரை நிர்வாணமாக்கி, இரும்பு ராடால் அடித்து துன்புறுத்தியுள்ளனர். இரவு முழுவதும் பணத்தை கேட்டு டார்ச்சர் செய்து மூவரும் சேர்ந்து இரும்பு ராடால் தாக்கியதில் பாபுஜி அதிகாலை 2.30 மணிக்கு உயிர் இழந்தார். கொலையை மறைக்க திட்டம் தீட்டிய 3 பேரும் பின்னர் பாபுஜி உடலை பார்சல் செய்து, காரில் ஏற்றி கொண்டு கொளப்பாக்கம் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் வைத்து பெட்ரோல் ஊற்றி உடலை எரித்துள்ளனர். ஆனால் எப்படியும் போலீஸில் சிக்கி கொள்வோம் என்ற அச்சத்தில் போலீஸில் சரணடைந்தது விசாரணையில் தெரியவந்தது.

இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மாங்காடு போலீஸார் கொளப்பாக்கம் சென்று பாதி எரிந்த நிலையில் இருந்த பாபுஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கோயம்பேடு சினிமா பைனான்சியர் சோட்டா வெங்கட்ராமன் மற்றும் அவரது ஊழியர்களான மதுரவாயல் பகுதியை சேர்ந்த திலீப்(30), சரவணன் (29) ஆகிய மூவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள நவீனை போலீஸார் தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in