சென்னை - கோவை சேரன் விரைவு ரயிலில் ஏற்படவிருந்த பெரும் விபத்து: அச்சத்தில் உறைந்த பயணிகள்

சென்னை - கோவை சேரன் விரைவு ரயிலில் ஏற்படவிருந்த பெரும் விபத்து: அச்சத்தில் உறைந்த பயணிகள்

திருவள்ளூர் அருகே ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் சென்னை - கோவை சேரன் விரைவு ரயில் ஏற்படவிருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சேரன் விரைவு ரயில் புறப்பட்டு நேற்று இரவு 11 மணி அளவில் திருவள்ளூர் அருகே சென்று கொண்டிருந்தது அப்போது எஸ்7 மற்றும் எஸ்8 என்ற இரு பெட்டிகளிடையே பயங்கர சத்தம் கேட்டது. இந்த சத்தத்தைத் தொடர்ந்து ரயிலில் பயணித்த பயணிகள் அச்சமடைந்து அலறியுள்ளனர். திருவள்ளூர் ரயில் நிலையத்தின் நாலாவது நடைமேடையில் ரயில் சென்று கொண்டிருந்த போது திடீரென இரு பெட்டிகளை இணைக்கும் கொக்கி உடைந்ததால் இந்த பலத்த சத்தம் கேட்டுள்ளது. இதனை உணர்ந்த ரயில் ஓட்டுநர் சாமர்த்தியமாக வேகத்தை குறைத்து, எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் ரயிலை நிறுத்தியுள்ளார்.

இதுகுறித்து உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்பகுதிக்கு வந்த ரயில்வே ஊழியர்கள் ரயில் பெட்டிகளின் இணைப்பு உடைந்த இடத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் ரயிலில் பயணம் செய்த பயணிகள் பெரும் அச்சத்தில் உறைந்தனர். இது குறித்து திருவள்ளூர் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்திற்கு பிறகு சென்னை பெரம்பூரில் இருந்து இணைப்பு கொக்கிகள் புதிதாக வரவழைக்கப்பட்டு, அவை ரயிலில் பொருத்தப்பட்டது. அதன்பின்னர் 3 மணி நேரம் தாமதமாக அரக்கோணம் மார்க்கமாக கோவைக்கு அந்த ரயில் புறப்பட்டுச் சென்றது.

வழக்கமாக அதிவேகமாக செல்லும் இந்த ரயில், ரயில் நிலையத்தின் அருகே குறைந்த வேகத்தில் பயணித்ததாலும், ஓட்டுநரின் சாமர்த்தியத்தாலும் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in