கோலாகலமாகத் தொடங்கியது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா!

கோலாகலமாகத் தொடங்கியது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா!

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

186 நாடுகள் பங்கேற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதன் தொடக்க விழா கடந்த மாதம் 28-ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு, கலை ஆகியவற்றை விளக்கும் விதமாகக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

தொடக்க விழாவைப் போல இன்று நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவிலும் தமிழக வரலாற்றைப் போற்றும் வகையில் பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எனத் தமிழக முதல்வர்களின் படங்கள் டிஜிட்டல் திரையில் காண்பிக்கப்பட்டது. 'ஆளப்பொறான் தமிழன்' பாடல் பின்னணியில் ஒலிக்க விழா மேடைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தார். தமிழக அமைச்சர்கள், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார்கோவிச் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். மாமல்லபுரத்திலிருந்து 69 குளிர்சாதனப் பேருந்துகளில் வீரர், வீராங்கனைகள், நடுவர்கள் உள்ளிட்டோர் விழா அரங்கத்திற்கு வந்திருந்தனர். ட்ரம்ஸ் கலைஞர் சிவமணி தலைமையில், வீணை கலைஞர் ராஜேஷ் வைத்யா, பியானோ கலைஞர் ஸ்டீபன் தேவசி, புல்லாங்குழல் கலைஞர் நவீன் ஆகியோர் பங்கேற்ற ‘இந்தியாவின் இதயத்துடிப்பு’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் நிறைவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in