‘உங்கள் மாநிலத்தில் ரோப் கார் வசதி பாதுகாப்பாக இருக்கிறதா?’

‘உங்கள் மாநிலத்தில் ரோப் கார் வசதி பாதுகாப்பாக இருக்கிறதா?’

ஜார்க்கண்ட் ரோப் கார் விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ரோப் கார் அமைப்புகளின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள் துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது. இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலம் தேவ்கர் மாவட்டத்தில் உள்ள பாபா வைத்தியநாத் கோயிலுக்குப் பக்தர்கள் சென்றுவர, அருகில் உள்ள மலைகளுக்கு இடையே ரோப் கார் வசதி உள்ளது. அடர்ந்த காடுகள் உள்ள பகுதியில் சுமார் 100 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்ட இந்த ரோப் கார் கம்பிவழித்தடம், 766 நீளம் கொண்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்.10) ராமநவமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அங்கு வந்திருந்தனர். இந்நிலையில், மாலை 4 மணி அளவில் 392 மீட்டர் உயரம் கொண்ட திரிகூட் மலை அருகே சில ரோப் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து, இந்திய விமானப் படை, தேசியப் பேரிடர் மேலாண்மைப் படை, இந்தோ - திபெத்திய எல்லைக் காவல் படை ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ரோப் கார்கள் மோதியதால் ஏற்பட்ட காயங்களால் ஒரு பெண்உயிரிழந்தார். 40 வயது ஆணும், 60 வயது பெண்ணும் ஹெலிகாப்டரால் மீட்கப்படும்போது தவறி விழுந்து உயிரிழந்தனர். இதுவரை 60 பேர் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உத்தரவிட்டிருக்கிறார். உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக, அனைத்து மாநில மற்றும் ஒன்றியப் பிரதேச அரசுகளுக்கு உள் துறைச் செயலாளர் அனுப்பியிருக்கும் கடிதத்தில், இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒத்திகை நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைக் கண்காணிக்க ஓர் உயரதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

பாதுகாப்புத் தரநிலைகளை உறுதிசெய்ய ரோப் கார் அமைப்புகளின் பராமரிப்பு மற்றும் திட்டம் தயார் நிலையில் வைத்திருக்கப்பட வேண்டும் என்றும் உள் துறைச் செயலாளர் அறிவுறுத்தியிருக்கிறார்.

அனுபவமும் தகுதியும் வாய்ந்த நிறுவனங்களைப் பணியமர்த்தி ஒவ்வொரு ரோப் கார் அமைப்பின் பாதுகாப்பை ஆய்வுசெய்ய வேண்டும் என்றும், ஆய்வின்போது தெரியவரும் பிரச்சினைகளை ரோப் காரை இயக்கும் நிறுவனங்கள் உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என்றும் உள் துறை அமைச்சகத்தின் கடிதம் அறிவுறுத்தியிருக்கிறது.

ஏழு ஆண்டுகால பழைய கம்பி

இதற்கிடையே, விபத்து நடந்த ஜார்க்கண்ட் ரோப் கார் அமைப்பின் பாதுகாப்புத் தன்மை குறித்து மார்ச் 17-ல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, சான்றளிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. கொல்கத்தாவைச் சேர்ந்த தாமோதர் ரோப்வேஸ் அண்ட் இன்ஃப்ரா லிமிட்டட் எனும் நிறுவனம் இங்குள்ள ரோப் கார் அமைப்பை இயக்கிவருகிறது.

ரோப் கார் வசதி மற்றும் இணைப்புக் கம்பிகளை ஆய்வுசெய்த அரசு நிறுவனமான கம்பி கயிறு மற்றும் மின்பொறியியல் நிறுவனம் (சிஐஎம்எஃப்ஆர்), ரோப் கார் வசதி பாதுகாப்பானது எனச் சான்றளித்தது தெரியந்திருக்கிறது. அதேசமயம், இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கம்பிகள் 7 ஆண்டுகள் பழமையானவை என்றும், அசாதாரணமாக ஏதேனும் தென்பட்டால் உடனடியாக கம்பிகள் மாற்றப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.