சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம்: மழையிலும் பக்தி பரவசத்துடன் வடம் பிடித்த பக்தர்கள்

சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம்: மழையிலும் பக்தி பரவசத்துடன் வடம் பிடித்த  பக்தர்கள்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன விழாவையொட்டி  இன்று தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க  விமர்சையாக  நடைபெற்றது.

உலகப் பிரசித்திபெற்ற சிதம்பரம் நடராஜர்  கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா கடந்த டிச.28-ம் தேதியன்று  கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று  புதன்கிழமை தங்க ரதத்தில் வெட்டுக்குதிரை வாகனத்தில் பிச்சாண்டவர் வீதி உலா சிறப்புடன் நடைபெற்றது.  ஆருத்ரா தரிசன விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம்   இன்று  காலை தொடங்கியது.  

அதனையொட்டி  சித்சபையில் வீற்றுள்ள மூலவரான ஸ்மத் நடராஜ மூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள், உற்சவமூர்த்திகளான ஸ்ரீ விநாயகர், ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகிய ஐவரும் இன்று காலை சிறப்பு வழிபாடுகளுக்குப் பிறகு தேருக்கு எழுந்தருளியனர்.  தனித் தனி தேர்களில் எழுந்தருளியதும் திருத்தேரோட்டம் தொடங்கியது. 

காலையில் சிதம்பரத்தில்  லேசான மழை பெய்தபோதும் மழையைப் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு  தேரை வடம் பிடித்து இழுத்தனர். நாதஸ்வர மேளம்,  செண்டை மேளம்,  சிவ வாத்தியங்கள், தாரை, தப்பட்டைகள்  முழங்க தேரோட்டம் வெகு சிறப்புடன் நடைபெற்றது. தேரோடும் வீதி எங்கும் பெண்கள் வண்ணக் கோலங்கள் வரைந்து தேரை உற்சாகமுடன் வரவேற்றனர். 

நான்கு வீதிகளையும் வலம் வந்து இன்று  மாலையில் தேர் நிலையை அடையும். அதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் நடராஜருக்கு  ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்வான  ஆருத்ரா தரிசனம் நாளை நடைபெறுகிறது.  வெள்ளிக்கிழமை  சூரிய உதயத்துக்கு முன்பு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகா பிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்தபிறகு பிற்பகல் 3 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபை பிரவேசமும் நடைபெறுகிறது. சனிக்கிழமை இரவு பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in