6 போலீஸார் மீது 290 ஆவணங்களுடன் ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை: விசாரணை கைதி மரண வழக்கில் சிபிசிஐடி நடவடிக்கை

விக்னேஷ்
விக்னேஷ்

காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் உயிரிழந்த வழக்கில் ஆறு போலீஸாருக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 290 ஆவணங்களுடன் குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை தலைமைச் செயலக குடியிருப்பு போலீஸார், கடந்த ஏப்.18-ம் தேதி இரவில் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆட்டோவில் கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் வந்த விக்னேஷ் என்பவரை விசாரணைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. மறுநாள் அவர் மர்மமான முறையில் விக்னேஷ் மரணமடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலக காலனி காவலர் பவுன்ராஜ், தலைமைக் காவலர் முனாப், சிறப்பு எஸ்.ஐ குமார், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக், ஆயுதப்படை போலீஸ்காரர்கள் ஜெகஜீவன்ராம், சந்திரகுமார் ஆகியோருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் கொலைக்குற்றச்சாட்டு மற்றும் வன்கொடுமை தடைச் சட்டப்பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் சிபிசிஐடி போலீஸார் சார்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.சுதாகர் இன்று ஆஜராகி தாக்கல் செய்துள்ளார். 127 சாட்சிகளின் வாக்குமூலங்கள், 290 ஆவணங்களுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் 64 சான்றுப் பொருட்கள் குறித்த விவரங்களும் இடம் பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in