“கேஜ்ரிவால் மீது விசாரணை தேவை ” - பிரதமருக்கு சரண்ஜீத் சிங் சன்னி வேண்டுகோள்

“கேஜ்ரிவால் மீது விசாரணை தேவை ” -  பிரதமருக்கு சரண்ஜீத் சிங் சன்னி வேண்டுகோள்

உத்தர பிரதேசம், பிஹார், டெல்லியிலிருந்து வருபவர்கள் குறித்து பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் பேசியது சர்ச்சையான நிலையில், “வெளியிலிருந்து வந்து இடையூறு செய்யும் துர்கேஷ் பதக், சஞ்சய் சிங், அர்விந்த் கேஜ்ரிவால் (ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள்) பற்றித்தான் அவ்வாறு பேசினேன்” என்று அவர் விளக்கமளித்திருந்தார். அதே சூட்டுடன் ஆம் ஆத்மி கட்சியில் இருந்த குமார் பிஸ்வாஸ் சொன்ன புகாரையும் கையில் எடுத்திருக்கும் சரண்ஜீத் சிங் சன்னி, அர்விந்த் கேஜ்ரிவால் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடியைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

பஞ்சாப் முதல்வராக வேண்டும் அல்லது ஒரு சுதந்திர நாட்டின் பிரதமராக வேண்டும் என்று கேஜ்ரிவால் முன்பு ஒருமுறை சொன்னதாக குமார் பிஸ்வாஸ் ஒரு காணொலியில் கூறியிருந்தார். அதில் அவர் கேஜ்ரிவாலின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை. ஆனால், அவரைத்தான் அவ்வாறு சொல்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை. அதேபோல், சுதந்திர நாடு என அவர் குறிப்பிட்டது காலிஸ்தானை. இதையடுத்து பிரிவினைவாத காலிஸ்தான் அமைப்பினருக்குக் கேஜ்ரிவாலுக்குத் தொடர்பு எனப் புகார்கள் எழுந்தன.

இந்தியாவை உடைக்க நினைக்கும் பாகிஸ்தானைப் போலவே ஆம் அத்மி கட்சியும் திட்டம் வைத்திருக்கிறது என்று பிரதமர் மோடியும், பஞ்சாப் தேர்தல் பிரச்சாரத்தின்போது விமர்சித்திருந்தார். பிரிவினைவாதிகளுடன் இணைந்து அரசு அதிகாரத்துக்கு வர முயற்சிக்கிறார்கள் என்றும் ஆம் ஆத்மி கட்சியினருக்கு அவர் கண்டனம் தெரிவித்திருந்தார். ராகுல் காந்தியும் அர்விந்த் கேஜ்ரிவாலை விமர்சித்திருந்தார்.

அந்தக் காணொலியை பாஜக வெளியிட்டிருந்தது. இதையடுத்து, அதை ஒளிபரப்ப தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. பின்னர் அந்தத் தடையை விலக்கிக்கொண்டது. இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையை, நேற்று இரவு சரண்ஜீத் சிங் சன்னி வெளியிட்டார்.

அத்துடன், குமார் பிஸ்வாஸின் புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

“அரசியலைத் தாண்டி, பிரிவினைவாதத்துக்கு எதிரான போரில் பெரும் விலையைக் கொடுத்தவர்கள் பஞ்சாப் மக்கள். எனவே, ஒவ்வொரு பஞ்சாபியின் கவலை குறித்தும் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும்” என்று அவர் கூறியிருக்கிறார்.

இதற்கிடையே, “குமார் பிஸ்வாஸ் ஒரு நகைச்சுவைக் கவிஞர். அவர் என்ன வேண்டுமானாலும் பேசுவார். அதைப்போய் மோடியும் ராகுலும் சீரியஸாக எடுத்துக்கொள்கிறார்கள்” என ஆம் ஆத்மி கட்சி பகடி செய்திருக்கிறது.

Related Stories

No stories found.