
நிலவை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயார் செய்துள்ள சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
நிலவை ஆராயும் நாடுகளில் இந்தியாவும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. தற்போது மூன்றாவது முறையாக விண்ணில் தடம் பதிக்க 615 கோடி செலவில் சந்திரயான் 3 திட்டம் தீட்டப்பட்டுள்ளது. சந்திரயான்-3 விண்கலம் 3,895 கிலோ எடை கொண்டது. ஏற்கெனவே சந்திரயான் 2-ல் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர், நிலவை சுற்றி வருவதால், இந்த முறை லேண்டர், ரோவர் கலன்கள் மட்டும் அனுப்பப்பட்டுள்ளன.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் சந்திரயான் 3 ஐ சுமந்து செல்லும் ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 25.5 மணி நேர கவுண்டவுன் நேற்று தொடங்கியது. இன்று பிற்பகல் சரியாக 2.35.17 மணிக்கு கவுண்டவுன் முடிந்து ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்களுக்குள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
சந்திரயான்-3 ஆகஸ்ட் 23 அல்லது 24-ம் தேதி நிலவின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலவில் சூரியன் உதிக்கும் நேரத்தைப் பொறுத்து இது மாறக்கூடும். தாமதம் ஏற்பட்டால், செப்டம்பர் மாதம் தரையிறங்குவதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிலவின் தென்துருவத்தில் களமிறங்கும் முதல் விண்கலம் என்ற பெருமையை சந்திராயன் 3 பெறும் என்று இஸ்ரோ காத்திருக்கிறது.
இந்தநிலையில், பூமியில் இருந்து 179 கிமீ தொலைவில் நீள் வட்டப்பாதையில் சந்திரயான்3 விண்கலம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
இந்த திட்டம் வெற்றியடைந்தால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு, நிலவில் விண்கலத்தை தரையிறக்கும் நான்காவது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும்.
பிரதமர் மோடி முன்னதாக இதுகுறித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சந்திரயான்-3 ஏவப்படும் ஜூலை 14, 2023 எனும் தேதி எப்போதும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். சந்திரயான் -3 ஒரு குறிப்பிடத்தக்க பணி. இது நமது தேசத்தின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் சுமந்து செல்லும்” என பதிவிட்டுள்ளார்.
சந்திரயான் 3 வெற்றி பெறும்பட்சத்தில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் விண்வெளித்துறையில் வளர்ச்சி கிடைக்கும் என்பதோடு, 600 பில்லியன் டாலர்கள் அதாவது சுமார் 50 லட்சம் கோடி மதிப்பிலான விண்வெளி தொழிலில் இந்தியாவின் நிலை மேம்படும் என்று ஓய்வுபெற்ற விஞ்ஞானி நம்பி நாராயணன் தெரிவித்துள்ளார்.