
இஸ்ரோ விஞ்ஞானியும் சந்திராயன் 3 திட்ட இயக்குனருமான வீர முத்துவேல் பகிர்ந்த உருக்கமான வீடியோ பதிவொன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஒரு தமிழனாக சந்திரயான் திட்டத்தில் அவர் மேற்கொண்ட சாதனைக்கு அப்பால், வளரும் தலைமுறைக்கும், சோர்ந்த சக மனிதர்களுக்கும் நம்பிக்கையூட்டும் டானிக் வரிகள் வீர முத்துவேல் பேச்சில் அடங்கி இருக்கின்றன.
சந்திரயான் திட்டத்தையும் சாதனைத் தமிழர்களையும் பிரிக்கவே முடியாது. நிலவு குறித்தான இஸ்ரோவின் ஆய்வு திட்டத்தின் அங்கமாக, சந்திரயான் திட்டங்கள் அடுத்தடுத்த கட்டங்களாக நடைமுறையாகி வருகின்றன. முந்தைய சந்திரயான் திட்டங்கள் போலவே, நேற்று நிலவில் வெற்றிகரமாக தடம் பதித்த சந்திரயான் 3 திட்டத்திலும், திட்ட இயக்குநராக ஒரு தமிழரே சாதனை புரிந்திருக்கிறார். சந்திரயான் 1 திட்ட இயக்குநராக மயில்சாமி, சந்திரயான் 2 திட்ட இயக்குநராக வனிதா முத்தையா என்ற வரிசையில் தற்போது, சந்திரயான் 3 திட்ட இயக்குநராக வீர முத்துவேல் சாதனை புரிந்திருக்கிறார்.
சந்திரயான் 3 திட்டத்தின் முத்தாய்ப்பாக அதன் விக்ரம் லேண்டர் நிலவின் பரப்பில் தரையிறங்கியதை அடுத்து, சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீர முத்துவேலை பாராட்டி பொதுவெளிக்கு அறிமுகம் செய்து வைத்தார் இஸ்ரோ தலைவர் சோம்நாத். இதனையடுத்து பொதுமக்கள் மத்தியில் வீர முத்துவேல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த, அதனை ஈடு செய்யும் வகையில் வீர முத்துவேல் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வளரும் மாணவர்கள், இளம் தலைமுறையினர் மட்டுமன்றி, நம்பிக்கை குன்றியிருக்கும் சகல வயதினருக்கும் வீர முத்துவேலின் ஊக்கமும், உருக்கமும் கலந்த இந்த பேச்சு உதவக்கூடும்.
அந்த வீடியோவில் அவர் பேசுகையில், ”விழுப்புரம் மாவட்டத்தில் நான் பிறந்து வளர்ந்தேன். அரசுப் பள்ளியில் தான் பத்தாம் வகுப்பு வரை படித்தேன். பள்ளியில் நான் ஒரு சராசரி மாணவன். அடுத்து என்ன படிப்பது எங்கே படிப்பது என்ற எந்த ஐடியாவும் அப்போது இல்லை. குடும்ப பின்னணியில் வழிகாட்ட படித்தவர்கள் என்று யாரும் இல்லை. நண்பர்களின் தாக்கத்தால் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ சேர்ந்து படித்தேன். அப்போது தான் பொறியியல் பட்டப்படிப்பின் மீது ஆர்வம் வந்தது.
அந்த ஆர்வத்தில் டிப்ளமோவில் 90% மார்க் எடுத்து, அதன் அடிப்படையில் பொறியியல் பட்டப்படிப்பு சேர்ந்தேன். எல்லா செமஸ்டரிலும் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பிடித்து விடுவேன். அதற்காக சதா எப்போதும் படித்துக் கொண்டே இருக்க மாட்டேன். எப்போது படிக்கிறோமோ அப்போது 100% கவனம் குவித்து, நல்லா புரிஞ்சு படிப்பேன்... அவ்வளவு தான்! அதுவே எனக்கு பொறியியல் பட்டப்படிப்பில் நல்ல மதிப்பெண் வாங்கித் தந்தது.
அதன் பலனாக, பொறியியல் முதுநிலை பட்டப்படிப்பில் சேர்ந்தேன். அங்கேயும் முதல், இரண்டாம் இடங்களில் வந்து விடுவேன். 91.7% மதிப்பெண் உடன் எம்.இ படிப்பை முடித்தேன். கேம்பஸ் இண்டர்வியூ வாயிலாக கோயம்புத்தூர் லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்தில், சீனியர் இன்ஜினியரா சேர்ந்தேன். அப்படி பணியாற்றி வந்தபோது, ஏரோஸ்பேஸ் ரிசர்ச் மீது பெரும் ஆர்வம் பிறந்தது. பிறகு பெங்களூர் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் டிவிஷனில், ரோட்டரி ரிசர்ச் அண்ட் டிசைன் சென்டரின் டிசைன் இன்ஜினியரா சேர்ந்து பணிபுரிந்தேன். அதன் பின்னரே எனது கனவான இஸ்ரோ சேட்டிலைட் சென்டரில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.
அங்கே முதலில் ப்ராஜெக்ட் இன்ஜினியர் ஆகவும், பிறகு ப்ராஜெக்ட் மேனேஜராவும், நிறைய ரிமோட் சென்ஸிங் அண்ட் சயின்டிஃபிக் சேட்டிலைட் உருவாக்கினோம். அந்த பணிகளின் ஊடே ’வைப்ரேஷன் சப்ரெஷன் ஆஃப் எலக்ட்ரானிக் பேக்கேஜ் இன் சாட்டிலைட்’ என்ற தலைப்பில் ஆய்வும் செய்து வந்தேன். இந்த ஆய்வுகள் சர்வதேச பதிப்புகளில் வெளியாகியும் வந்தன. அதே போன்று சர்வதேசளவில் விஞ்ஞானிகளுக்கான சந்திப்பு கூட்டங்களிலும் பங்கேற்று இருக்கிறேன்.
வெற்றிகரமாக பிஹெச்டி முடித்ததும், இஸ்ரோ சேட்டிலைட் அணியில் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்து அசோசியேட் ப்ராஜெக்ட் டைரக்டரா மிகப்பெரும் திட்டமான சந்திராயன் 2, வெற்றிகரமாக நிறைவு செய்ய உதவினேன். அதன் தொடர்ச்சியாகவே சந்திராயன் 3 திட்ட இயக்குநராக வாய்ப்பளித்தார்கள். இதற்காக மிகப்பெரும் அணியை வழி நடத்தும் வாய்ப்பு கிடைத்தது.
நான் ஒரு சிம்பிள் பர்சன். என்னால் இந்த அளவுக்கு வர முடியும்னா... எல்லோராலும் வர முடியும். வாய்ப்பு என்பது எல்லோருக்கும் இருக்கு. அந்த வாய்ப்பை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பது தான் மிகவும் முக்கியம். நம் கையில் வாய்ப்பு இருக்கும்போது, கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். நாம் எடுக்கும் முயற்சி மட்டுமே நமக்கு வெற்றியை கொடுக்கும். அனைவருக்கும் வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்” என்று வீர முத்துவேல் பேசியுள்ளார். கேட்போருக்கு உத்வேகம் அளிக்கும் அவரது பேச்சும் அதில் பொதிந்துள்ள கருத்துகளும் பரவலாக கவனம் ஈர்த்து வருகின்றன.