
வடகிழக்கு பருவமழையின் தீவிரம் தொடங்கியுள்ள நிலையில் இன்று டெல்டா உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் மிக கனமழைக்கும், மேலும் 14 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 28-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. மழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அதிக கன மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் சென்னையில் பெய்த கனமழை நேற்று பகலில் ஓய்ந்திருந்த நிலையில் மாலையிலிருந்து திரும்பவும் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல இடங்களில் மீண்டும் தண்ணீர் தேங்கி இரவு முழுவதும் தண்ணீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் இரவிலும் இன்று காலையிலும் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் தாலுகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், பொன்னேரி, ஆவடி, பூந்தமல்லி ஆகிய நான்கு தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் மிக கனமழைக்கும், 14 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஏழு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும்.
அதேபோல கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, தேனி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இன்றும், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.