12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும்!

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும்!

ஈரோடு, கிருஷ்ணகிரி உள்பட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த மேன்டூஸ் புயல் நேற்று நள்ளிரவு மால்லபுரத்திற்கு அருகே கரையை கடந்து இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து வட தமிழக பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக இன்று ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலும் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 12, 13, 14 ஆகிய தேதிகளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் அவ்வப்போது பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் இன்று வீசக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் லட்சத்தீவு பகுதிகள், கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக் கூடும். வரும் 14-ம் தேதி தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசப்படும். இதனால் மீனவர்கள் இப்போது செல்ல வேண்டாம்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in