125 பேரை கொன்று சரணடைந்த சம்பல் கொள்ளைக்காரன் பஞ்சம்சிங்: ம.பி அரசை எதிர்த்து உண்ணாவிரதம்

பஞ்சம்சிங்
பஞ்சம்சிங்125 பேரை கொன்று சரணடைந்த சம்பல் கொள்ளைக்காரன் பஞ்சம்சிங்: ம.பி அரசை எதிர்த்து உண்ணாவிரதம்

ஒரு காலத்தில் பிரபல சம்பல் கொள்ளைக்காரனாக இருந்த பஞ்சம்சிங் சவுகான், சரணடைந்து காந்திய வழியில் வாழ்கிறார். இவர், தனது கட்டிடத்தை புல்டோசரால் இடிக்கும் மத்திய பிரதேச அரசை எதிர்த்து உண்ணாவிரதம் அறிவித்துள்ளார்.

உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநில எல்லைகளில் அமைந்த பகுதி சம்பல் பள்ளத்தாக்கு. ஒரு காலத்தில் இங்கிருந்த பல கொள்ளைக்காரர்களில் பஞ்சம்சிங் சவுகானும் ஒருவர். இவர், 1960ம் ஆண்டுகளில் 3 மாநில காவல்துறைக்கு சவால் விட்ட பிரபலமானக் கொள்ளைக்காரர். தன் கொள்ளை வாழ்க்கையில் சுமார் 125 பேரை கொன்ற புகார் பஞ்சம்சிங் மீது இருந்தது. சுமார் 500 கொள்ளையர்களின் தலைவனாக இருந்தவர் தலைக்கு ரூ.2 கோடி பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ஆட்சியில் 1972 இல் பஞ்சம்சிங், ம.பி அரசின் முன் சரணடைந்தார். அப்போது தம்மை தூக்கிலிடக் கூடாது என்ற நிபந்தனை விதித்தவர் ஆயுள் தண்டனைக்கு பின் 1980ல் விடுதலையானார். பிறகு, ஆன்மிகம் மற்றும் காந்திய வழியில் வாழும் பஞ்சம்சிங்கிற்கு தற்போது வயது 100. பிந்த் மாவட்டத்தின் லஹார் எனும் இடத்தில் வசிக்கும் பஞ்சம்சிங், தனது சொத்துக்களில் ஒரு வீட்டை ஒரு ஆன்மிக அமைப்பிற்கு நன்கொடையாக அளித்திருந்தார்.

தற்போது, பஞ்சம்சிங்கால் நன்கொடையாக அளிக்கப்பட்ட வீடு சட்டவிரோதமானது எனவும், அதை புல்டோசரால் இடித்து தள்ள இருப்பதாகவும் லஹர் முனிசிபல் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த முன்னாள் கொள்ளைக்காரர் பஞ்சம்சிங், அரசை எதிர்த்து சாகும்வரை உண்ணாவிரதம் அறிவித்துள்ளார். இந்த வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். அதேசமயம், பஞ்சம்சிங்கின் வீட்டிற்கான மின்சாரக் கட்டணமும் பல வருடங்களாக நிலுவையில் உள்ளது. இதை கட்டாத பஞ்சம்சிங்கின் சொத்துக்களை ஜப்தி செய்யவும் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையும் தனது போராட்டத்திற்காக ஒரு எதிர்ப்புக் கோரிக்கையாக பஞ்சம்சிங் சேர்த்துள்ளார். கொள்ளை, கொலைக்கான செய்தியாக இருந்த பஞ்சம்சிங் இப்போது, அறப்போராட்டத்தில் இறங்கியிருப்பதும் பொதுமக்கள் இடையே தலைப்புச் செய்தியாகி விட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in