கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி பள்ளிகள் மூலம் மாணவிகளுக்கு செலுத்தப்படும்: மத்திய அரசு

பள்ளி மாணவிகள்
பள்ளி மாணவிகள்hindu கோப்பு படம்

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக இந்தியாவில் முதன்முதலாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஹெச்பிவி தடுப்பூசி, 9 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு பள்ளிகள் மூலம் செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக இந்தியாவில் முதன்முதலாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட HPV (மனித பாப்பிலோமா வைரஸ்) தடுப்பூசி அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும். அதன் பிறகு மத்திய அரசு விரைவில் நாடு தழுவிய நோய்த்தடுப்பு இயக்கத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜூலை மாதம், இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஆணையம், உள்நாட்டு ஹெச்பிவி தடுப்பூசியை தயாரிப்பதற்கான அங்கீகாரத்தை சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவுக்கு வழங்கியது.

பள்ளி மாணவிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்துவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 முதல் 10-ம் வகுப்புகளில் சேரும் சிறுமிகளின் எண்ணிக்கையை கணக்கிடத் தொடங்குமாறு மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பள்ளிகளில் தடுப்பூசி போடுவதற்காக ஹெச்பிவி தடுப்பூசி மையங்கள் அமைக்கவும், பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புகள் மூலம் பெற்றோர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அரசு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படவும் மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக மாநிலங்களுக்கு மத்திய பள்ளிக் கல்வி அமைச்சகத்தின் செயலாளர் சஞ்சய் குமார் மற்றும் சுகாதாரம், குடும்ப நல அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷன் ஆகியோர் அனுப்பியுள்ள அறிக்கையில், “கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுக்கக்கூடிய மற்றும் குணப்படுத்தக்கூடிய நோயாகும். ஹெச்பிவி தடுப்பூசி வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் முன் போடப்பட்டால் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் பெரும்பாலான பாதிப்புகளைத் தடுக்கலாம். தடுப்பூசி மூலம் தடுப்பு என்பது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை நீக்குவதற்கு உலக சுகாதார நிறுவனத்தால் பின்பற்றப்பட்ட உலகளாவிய வழிமுறையாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயானது, மார்பக புற்றுநோய்க்குப் பிறகு இந்தியாவில் அதிகளவில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோயாகும். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்பு அதிகம் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in