நாளை மகாத்மா காந்தியின் வேட்டிக்கு நூற்றாண்டு விழா!

திருப்பூரில் ஓர் வித்தியாசக் கொண்டாட்டம்
நாளை மகாத்மா காந்தியின் வேட்டிக்கு நூற்றாண்டு விழா!

சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு, செப்டம்பர் 22-ம் நாள், மதுரை மாநகரில் தான் அரை ஆடைக்கு மாறினார் காந்தி. வேட்டியை மட்டுமே தனது உடையாக்கினார். “என் ஏழை இந்தியனின் எளிய தோற்றம் இந்தக் கோவணம் மட்டுமே” என்று சொன்ன அவரை, “அரை நிர்வாண பக்கிரி” என்று பகடி செய்தார் வெள்ளையர் அதிபர் வின்ஸ்டன் சர்ச்சில். நாமெல்லாம் காந்தியை நினைக்கிறோமோ இல்லையோ அவரது கொள்கைகளை, அஹிம்சா வழியை, சத்தியத்தை, கிராமப் பொருளாதாரத்தை, சுதேசிக் கொள்கையை நம் தலைமுறைகள் மறந்து வருகின்றன.

காந்தி அரை ஆடைக்கு மாறிய நாளை நினைக்க, இப்போது எத்தனை காந்தியவாதிகள் இருக்கிறார்கள் தெரியவில்லை. இந்த நாளை காந்திய அமைப்புகள் கொண்டாடுகின்றனவா என்றும் தெரியவில்லை. ஆனால், திருப்பூர் ராம்ராஜ் காட்டன் உரிமையாளர் கே.ஆர். நாகராஜன் இதை மறக்கவில்லை.

காந்தி எளிய உடைக்கு மாறிய செப்டம்பர் 22-ம் தேதியை ‘காந்திய வேட்டி நூற்றாண்டு விழா’வாக திருப்பூரில் கொண்டாடுகிறார் நாகராஜன். இதில், கிருஷ்ணராஜ் வாணவராயர் உள்ளிட்ட காந்தியக் கோட்பாளர்கள் கலந்துகொண்டு சிறப்புரை நல்குகிறார்கள்.

“எப்படி வந்தது உங்களுக்கு இந்த எண்ணம்... உங்கள் வியாபாரப் பொருளான வேட்டிக்கான விளம்பரமா இது?” என்ற கேள்விகளுடன் ராம்ராஜ் கே.ஆர்.நாகராஜனிடம் பேசினோம்.

“இதை வேட்டிக்கான - வேட்டி வியாபாரத்துக்கான விளம்பரமாக பார்க்க வேண்டியதில்லை. இதன் மறுபக்கம், நம் சுதேசிக் கொள்கை, கிராமப் பொருளாதாரம், காந்தியத்தின் வேள்வி எல்லாம் உள்ளடங்கியிருக்கிறது” என்று சொன்னார்

இது தொடர்பாக மேலும் அவர் பேசுகையில், ‘‘அண்மையில் காந்தி சம்பந்தப்பட்ட புத்தகம் ஒன்றை படித்தேன். அதில், காந்தி மதுரை வந்தபோது நடந்த விஷயங்களை எல்லாம் தேதி வாரியாக எழுதியிருந்தார்கள். ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று படித்தது. அப்போது இதைப் பற்றி எண்ணம் எல்லாம் வரவில்லை. நாங்கள் எங்கள் நிறுவனத்தின் சார்பில் மாதாந்திர இதழ் ஒன்றை நடத்தி வருகிறோம். அதில் செப்டம்பர் மாதத்திற்கான செய்திகளாக எதையெல்லாம் போடலாம் என்று விவரித்து கொடுத்திருந்தார்கள். அதைப் பார்த்த நான், “ஏன் செப்டம்பர் 22 காந்தியைப் பற்றி எழுதக்கூடாது” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “காந்தி ஜெயந்தி அக்டோபர் 2-ம் தேதி வருகிறது. அதனால் அக்டோபர் இதழில் அதைப் பற்றி நிறையவே எழுதலாம்” என்றார்கள்.

ராம்ராஜ் கே.ஆர். ‘நாகராஜன்’
ராம்ராஜ் கே.ஆர். ‘நாகராஜன்’

இல்லை, “காந்தி ஜெயந்தி வருடம் தோறும் வருவது. அதை விட செப்டம்பர் 22 முக்கியம். அது, மதுரையில் காந்தி தன் இடுப்பில் வேட்டியை கட்டிய நாள். அந்த சம்பவம் நடந்து இப்போது 100 ஆண்டு ஆகிறது. அதனால் அந்த நாள் இன்னமும் முக்கியத்துவம் பெறுகிறது எனச் சொல்லி அதைப் பற்றி விரிவான கட்டுரைகள் எழுதலாம். அக்டோபரில் வழக்கமான காந்தி ஜெயந்தி கட்டுரைகளும் வரட்டும்” என்றேன். அதில் எழுதியும் விட்டோம். அப்படியும் அது சம்பந்தமான எண்ணம் எனக்குள் இருந்தது. ‘காந்தி மதுரை வந்தது... நேரு ராணி மங்கம்மாள் கோட்டைக்கு விஜயம் செய்தது... காந்தி சுடப்பட்டபோது அணிந்திருந்த வேட்டியை மதுரை மியூசியத்தில் வைத்திருப்பது போன்ற விஷயங்கள் எல்லாம் எனக்கு மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

அதை நண்பர்களுடன் பேசப்பேச அப்புறம்தான் ‘காந்தி வேட்டி நூற்றாண்டு’ன்னு கொண்டாட முடிவு செஞ்சோம். இதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால், விவேகானந்தர் ஆன்மிகத்தைப் பற்றி பேசினார். பரமஹம்சரும் ஆன்மிகத்தைப் பற்றி பேசினார். அரவிந்தரும் ரமண மகரிஷியும் ஆன்மிகம் பேசினார்கள். காந்தியும் அந்த வழியே நடக்கச் சொன்னார். ஆக, எல்லா விஷயங்களும் ஒரே புள்ளியில் வந்து சேருகிறது.

எங்களது கொண்டாட்டம் காந்தியைப் பற்றி இருந்தாலும், வேட்டியைப் பற்றி இருந்தாலும், ராம்ராஜ் பற்றி இருந்தாலும், சுதேசியைப் பற்றி இருந்தாலும், நெசவாளர் பற்றி இருந்தாலும் ஒரே ஆதாரம் வேட்டிதான். அது வேட்டி என்ற புள்ளியில்தான் வந்து இணைகிறது. காந்திக்கு வெள்ளையனை எதிர்த்து சுதந்திரம் வாங்குவதற்கு வேட்டி ஆயுதமாகப் பயன்பட்டது. ஆனால், இந்திய மக்களுக்கு சுதேசிப் பொருளாதாரம். எங்க ஊர் நெசவாளர்களுக்கு இது வாழ்வாதாரம். ராம்ராஜுக்கு இது ஆதாரம்’’ என்று சொன்னார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in