ஜிஎஸ்டி வரி விகிதங்களைக் குறைப்பது அவசியம்: அரசு இதை உணர்வது எப்போது?

ஜிஎஸ்டி வரி விகிதங்களைக் குறைப்பது அவசியம்: அரசு இதை உணர்வது எப்போது?

பொது சரக்கு - சேவை வரி விதிப்பு முறை (ஜிஎஸ்டி) இந்தியாவில் அமலுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. இது முழுக்க திருப்தி அளிப்பதாகவும் வெற்றிகரமாகவும் அமைந்துவிடவில்லை. மகாராஷ்டிரம், குஜராத், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா போன்ற தொழில்வளம் மிக்க பொருளாதார வளர்ச்சி கண்ட மாநிலங்கள்கூட மத்திய அரசு தங்களுக்குப் பிரித்துத் தரும் நிதி போதவில்லை என்ற அதிருப்தியில் இருக்கின்றன. பழையபடி மாநிலங்களே விற்பனை வரி மூலம் வருவாயைப் பெருக்கிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற விருப்பத்தைச் சில மாநிலங்கள் மறைமுகமாகக் கூட வலியுறுத்துகின்றன.

ஜிஎஸ்டி வரி வசூலிப்புக்குப் பிறகு பெரும்பகுதியை மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ளும் மத்திய அரசாலும் விரும்பியபடி இதில் மாற்றங்களை எளிதில் கொண்டுவர முடியவில்லை. மத்திய – மாநில அரசுகளின் அமைச்சர்கள், முதல்வர்கள் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பை ஜிஎஸ்டி அளித்துள்ளது. இதற்கான அமைச்சர்களைக் கொண்ட பேரவையில் கருத்தொற்றுமை அடிப்படையில்தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன, பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுப்படி அல்ல. புதிதாக எந்த மாற்றத்தைச் செய்வதாக இருந்தாலும் அனைவரும் ஆலோசனை கலந்து அனைவரும் ஏற்றால்தான் ஏதும் செய்ய முடியும். மத்திய அரசால் தனியாக எதையும் செய்துவிட முடியாது.

நான்கு விகிதங்கள்

இப்போது 5, 12, 18, 28 சதவீதங்களில் வெவ்வேறு வகைப்படுத்தப்பட்ட சரக்குகள் – சேவைகள் வரிவிதிப்புக்கு உள்ளாகின்றன. இதற்குப் பதிலாக ஒன்று அல்லது இரண்டு வரி விகிதங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற கருத்து கூறப்படுகிறது. இரண்டுகூட வேண்டாம் ஒரே சராசரி விகிதம் இருந்தால் போதும் என்றும் சிலர் கருதுகின்றனர். அந்த வகையில் எல்லாப் பொருட்கள் மீதும் சராசரியாக 15.5 சதவீதம் வரி விதித்துவிட்டால் இப்போது கிடைக்கும் வருவாயும் குறையாது என்று ஒரு கணக்கு கூறுகிறது. ஆனால் வரி விதிப்புக்கான இலக்கணப்படி, அப்படி எல்லா சரக்குகளுக்கும் சேவைகளுக்கும் ஒரே விகிதத்தில் வரி விதிப்பது சரியில்லை.

வணிகர்கள் கோரிக்கை

வரி விகிதங்களைக் குறைப்பது மட்டுமல்ல, வரி செலுத்துவதற்கான படிவங்கள், நெறிமுறைகள், விதிகள், விலக்குகள், ஒறுப்புக் கட்டணங்கள் ஆகியவற்றையும் எளிமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வணிகர்களால் வலியுறுத்தப்படுகிறது. வரி செலுத்துவதற்கான இணையதளத்தில் அடிக்கடி ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளும் பெரிய இடையூறாகிவிடுகின்றன.

வரி விகிதங்களை இப்போதுள்ள நான்கு ரகங்களிலிருந்து இரண்டாக அல்லது மூன்றாகக் குறைப்பது குறித்து அரசும் ஆராய்ந்து வருகிறது என்று மத்திய அரசின் வருவாய்த் துறைச் செயலர் தருண் பஜாஜ் டெல்லியில் ‘அசோ-சேம்’ என்ற தொழில் வர்த்தக சபையினர் கூட்டத்தில் திங்கள்கிழமை (ஜூலை 4) தெரிவித்திருக்கிறார். உச்சபட்ச அளவான 28 சதவீதம் என்பது ஆடம்பரப் பொருட்கள் மீதும் மதுபானம் உள்ளிட்ட ’பாவப் பொருட்கள்’ (Sin Goods) மீதும் விதிக்கப்படுகிறது. குதிரைப் பந்தயம், ரம்மி சீட்டாட்டம், பெரும் பணக்காரர்கள் கூடும் கேளிக்கை விடுதிகள், உல்லாசக் கப்பல் பயணம் போன்றவற்றுக்கு இந்த அதிகபட்ச வரி விகிதம் விதிக்கப்படுகிறது. இந்த அளவு அதிகம் என்பது உண்மையாக இருந்தாலும் இந்த விதிப்பைத் தாங்கக் கூடியவர்கள் மீதுதான் விதிக்கப்படுகிறது. எனவே இதை கைவிடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று பஜாஜ் தெரிவித்துவிட்டார்.

மத்திய அரசின் வருவாய்த் துறைச் செயலர் தருண் பஜாஜ்
மத்திய அரசின் வருவாய்த் துறைச் செயலர் தருண் பஜாஜ்

இந்த வரி விதிப்பு விகிதங்கள் குறித்து பல்வேறு கருத்துகள் இருந்தாலும் மக்கள் அன்றாடம் வாங்கிப் பயன்படுத்தும் அத்தியாவசியப் பண்டங்கள் நூற்றுக்கும் மேல் எந்தவித வரி விதிப்புக்கும் உள்படுத்தப்படாமல் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. எனவே பெரும்பாலான மக்களுடைய வாங்கும் சக்தியைக் குறைக்காமல்தான் வரி விகிதங்கள் முதலில் தீர்மானிக்கப்பட்டன. இந்த வரி வசூலில் கிடைக்கும் வருவாய் மத்திய – மாநில அரசுகளால் பகிர்ந்துகொள்ளப்படுவதால் இந்த வரி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என்ற யோசனை வரும்போதெல்லாம் பல மாநில அரசுகளும் சரியென்று ஏற்காமல் மெளனம் சாதிக்கின்றன அல்லது அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்றே ஒத்திப்போடுகின்றன. ஜிஎஸ்டி கூட்டங்களில் பங்கேற்ற பின் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர்களும் நிதியமைச்சர்களும் பிற கட்சி முதல்வர்களும் நிதியமைச்சர்களும் அரசியல் நோக்கில்தான் அதிகக் கருத்துகளைப் பொது வெளியில் வைக்கின்றனர். ஆனால் பேரவைக் கூட்டத்துக்குள் எது சாத்தியமோ, எது வருவாயைப் பெருக்குமோ அதையே ஆதரிக்கின்றனர்.

மதுபானம், பெட்ரோல்-டீசல் மீது மத்திய அரசு தனியாகவும் மாநில அரசுகள் மேலதிகமாகவும் வரிகளை விதிக்கின்றன. இந்தச் சுமையைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வந்தபோது மத்திய அரசு அதைக் குறைக்கட்டும் என்றே மாநிலங்கள் கூறின. மத்திய அரசு குறைத்த பிறகு ஒரு சில மாநிலங்கள் மட்டுமே மதிப்பு கூட்டப்பட்ட வரியை பெட்ரோல்-டீசல் போன்றவற்றின் மீது குறைத்தன. எந்த மாநில அரசும் வருவாய் இழப்பை விரும்புவதில்லை. ஜிஎஸ்டி அமலுக்கு வருவதால் தங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட ஐந்தாண்டுகளுக்கு மத்திய அரசு தங்களுக்கு இழப்பீட்டுத் தொகையைத் தர வேண்டும்என்று கோரிய மாநிலங்கள் இப்போது அதை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன. வரி வருவாயில் மாநிலங்களுக்கு இப்போது பிரித்துத் தரும் தொகையை 70 சதவீதம் அளவுக்கு மாநிலங்களுக்குத் தந்துவிட்டு எஞ்சிய 30 சதவீதத்தை மத்திய அரசு தனக்கு எடுத்துக்கொள்ளலாம் என்கின்றன.

சீன – பாகிஸ்தான் எல்லைகளில் ராணுவத்தைத் தயார் நிலையில் வைத்திருக்கவும் ராணுவத்துக்குத் தேவைப்படும் ஆயுதங்கள், வெடிகுண்டுகள், தளவாடங்கள் வாங்கவும் அதிகம் செலவிட வேண்டியிருக்கிறது. பல ஆண்டுகளாகப் போர் விமானங்கள், போர்க் கப்பல்கள், டேங்குகள் வாங்காததால் கையிருப்பில் போதிய அளவுக்கு அவற்றை வைத்திருக்க கோடிக்கணக்கில் செலவிட வேண்டியிருக்கிறது. ஒரே ரேங்க் – ஒரே ஓய்வூதிய திட்ட அமலுக்குப் பிறகு ராணுவத்துக்கு ஒதுக்கும் தொகையில் பெருமளவு ஊதியம், ஓய்வூதியம், படிகள் போன்றவற்றுக்கே செலவாகிறது என்பதால்தான் விஷப் பரிட்சையாக அக்னிபத் திட்டத்தைக்கூட மத்திய அரசு கொண்டுவந்திருக்கிறது.

கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு அமலான பொதுமுடக்கம் காரணமாக வரி வருவாய் இழப்பு மத்திய அரசுக்கும் ஏற்பட்டது. ஆனால் தடுப்பூசிகள் தயாரிப்பு, விநியோகச் செலவு உள்பட மருத்துவ முகாம்கள், மருத்துவப் பணிகள் செலவுகளை மத்திய அரசு அதிகம் ஏற்க நேரிட்டது. வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களுக்கு பொது விநியோக முறைமூலம் விலையில்லாமல் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து வழங்கியது. ஏழைகளுக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கிலும் செலவுக்குப் பணம் செலுத்தியது. இதற்கிடையில் சிறு, குறு விவசாயிகளுக்கும் அவர்களுடைய வங்கிக் கணக்குகளில் பணம் சேர்க்கப்பட்டது. இந்தச் செலவுகள் மத்திய அரசுக் கணக்கைச் சேர்ந்தவை.

மாநிலங்கள் வணிக வரி தவிர பத்திரப்பதிவுக்கான முத்திரைத்தாள் கட்டணம் மூலமும் உள்ளாட்சி மன்றங்கள் மூலமும் அதிக வருவாயைத் திரட்ட முடியும். மாநிலங்கள் தங்களுடைய வருவாயைப் பெருக்கவும் செலவைக் குறைக்கவும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டால்தான் முன்னேற்றம் காண முடியும். பிஹார் போன்ற மாநிலங்கள் பின்தங்கிய நிலையிலிருந்து விடுபட சிறப்பு நிதியுதவியை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கின்றன. வட கிழக்கு மாநிலங்களும் ஆந்திரம், தெலங்கானா போன்ற மாநிலங்களும்கூட இத்தகைய கோரிக்கைகளை வலியுறுத்துகின்றன.

“பொது சரக்கு சேவை வரியை நாங்கள் திட்டமிட்டிருந்த விதமே வேறு, இப்போது அமல்செய்யப்படும் முறையில் அதை நாங்கள் திட்டமிடவில்லை, எனவே இதைக் கைவிட்டுவிட வேண்டும்” என்று ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள் கூறுகின்றனர். பொது சரக்கு சேவை வரி பெரிய வெற்றியைத் தரவில்லை, எதிர்பார்த்தபடி வருவாயைப் பெருக்கிவிடவில்லை என்றாலும் ஒரு சீர்மையைக் கொண்டுவரும் முயற்சியாகவே அணுகப்பட்டது. அந்த நிலையிலிருந்து பின்வாங்குவது பிறகு மீண்டும் இத்தகைய முயற்சியைக் கைக்கொள்ள முடியாமல் தடுத்துவிடும்.

சரக்கு சேவை வரி அமலுக்கு முன்னதாகவே இதை நன்கு ஆராய்ந்திருக்க வேண்டும். ஏனென்றால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் - குறிப்பாகத் தொழில் தொடங்க நினைப்பவர்கள் ஒரே நாட்டுக்குள் வெவ்வேறு வரி விகிதங்கள் கடைப்பிடிக்கப்பட்டால் குழப்பம் அடைவார்கள், வரி விகிதம் குறைவாக உள்ள தொழில் மாநிலங்களிலேயே எல்லோரும் தொழில் தொடங்குவார்கள். எனவே சமச்சீரற்ற பொருளாதார வளர்ச்சியே தொடரும் என்றெல்லாம் கூறினார்கள். இப்போது ஜிஎஸ்டியால் அந்த நிலைமை மாறிவிட்டதா என்பதை ஆராய்வதும் அவசியம். ஏனென்றால் இப்போதும் ஏற்கெனவே வளர்ந்த மாநிலங்களை நோக்கித்தான் தொழில் முதலீடுகள் வருகின்றன.

பாதுகாப்பான நல்ல முடிவு

பாதுகாப்புத்துறைக்குத் தேவையானவற்றைப் பெருமளவு உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் என்பதும் அதற்குத் தனியார் துறையையும் அனுமதிக்க வேண்டும் என்பதையும் ஏற்று மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகள் வரவேற்கத்தக்கவை. அடித்தளக் கட்டமைப்புத் துறைகளுக்குத் தேவைப்படும் மூலதன முதலீட்டுக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி போதாது என்றாலும் அதன் முனைப்பு கவனிக்கப்பட வேண்டியது.

கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு பெட்ரோல்-டீசல் விலை உயர்வும், உக்ரைன் மீதான ரஷ்ய நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள உலகளாவிய விலைவாசி உயர்வும், அமெரிக்க பெடரல் வங்கி, சேமிப்பு மீதான வட்டி வீதத்தை வரலாறு காணாத அளவு உயர்த்தியதால் அன்னிய முதலீட்டாளர்கள் தங்கள் நாட்டிலேயே முதலீடு செய்வதும் மிகப் பெரிய சவால்கள். பொது சரக்கு சேவை வரி வசூலிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது அல்லது அதே அளவில் பராமரிக்கப்படுவது நல்ல அறிகுறி.

வேலைவாய்ப்பை உருவாக்குவது, அரசுக்குப் புதிய சொத்துகளைச் சேர்ப்பது, அடித்தளக் கட்டமைப்புத் துறைகளுக்கு முதலீடு ஈர்ப்பது ஆகியவற்றில் மாநிலங்களும் அக்கறை செலுத்த வேண்டும். பெட்ரோல் – டீசல் இறக்குமதியைக் குறைக்க மாற்று எரிபொருள் வளங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். மத்திய அரசின் திட்டங்களுக்குத் தேவைப்படும் நிலங்களைக் கையகப்படுத்துவதில் முனைப்பு காட்ட வேண்டும். மத்திய அரசின் திட்டம் மட்டுமல்ல மாநிலங்களின் திட்டங்களும் தொய்வில்லாமல் விரைந்து முடிக்கப்பட வேண்டும். மக்களுடைய வரிப்பணத்தைச் செலவிடுகிறோம் என்ற அக்கறை அனைவருக்கும் இருப்பது அவசியம். கல்வி, சுகாதாரத்தில் முதலீட்டை அதிகப்படுத்த வேண்டும். மாநில அரசுகள் உடனடியாக வருவாய் தரக்கூடிய திட்டங்களுக்கும் மாநில வளர்ச்சிக்கு நீண்ட காலப் பயன் அளிக்க க் கூடிய திட்டங்களுக்கும் முன்னுரிமை தர வேண்டும். வரிகளை உயர்த்தவும், அரசு அளிக்கும் சேவைக்கான கட்டணங்களைத் திருத்தவும் தயங்க க் கூடாது. இலவச சலுகைகளை அளிக்கும்போது தேவைப்படுவோருக்கு மட்டும் அவை கிடைக்குமாறு செய்வதால் விரயம் தவிர்க்கப்படும்.

ஒருதலைப்பட்சமானதா சீர்திருத்தம்?

வேளாண்துறையில் அரசு கொண்டு வந்த சீர்திருத்த சட்டங்கள், நிலம் கையகப்படுத்த கொண்டு வந்த சட்டங்கள், ராணுவத்தில் ஆள்சேர்ப்புக்கான அக்னிப் பாதை திட்டம் ஆகியவற்றுக்குத் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புகளை முழுக்க முழுக்க அரசியல் நோக்கமுள்ளவை என்று புறந்தள்ளிவிட முடியாது. எந்தத் திட்டமாக இருந்தாலும் மாநிலங்களையும் சம கூட்டாளிகளாகக் கருதி அவர்களுடன் ஆலோசனை கலந்து அவர்களுடைய யோசனைகளை ஏற்று அமல்படுத்துவதே திட்டங்கள் வெற்றியடைய வழிபிறக்கும். அடுத்து தொழிலாளர் நல சட்டத் தொகுப்பு குறித்து மத்திய அரசு கவனம் செலுத்தப் போகிறது. இதிலாவது மாநில அரசுகள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றுடன் அரசு முன்கூட்டியே ஆலோசனை கலப்பது நல்லது. தொழில்துறை முதலீடும் உற்பத்தியும் பெருக வேண்டும் என்பதில் எவருக்கும் இரண்டுவிதக் கருத்துகள் கிடையாது. ஆனால் அது தொழிலாளர்கள் சுரண்டப்படாமலும் வஞ்சிக்கப்படாமலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். எந்தவித பாதுகாப்புமற்ற வேலைவாய்ப்பைவிட, எதிர்காலத்துக்கும் உத்தரவாதம் தரும் வேலைவாய்ப்பே சிறந்தது.

நிரந்தர வேலைவாய்ப்பு என்பது அரசும் தொழில்துறையினரும் இணைந்து சிந்தித்தால் இயலாத காரியம் அல்ல. தகவல் தொழில்நுட்பத் துறையைப் போல நிச்சயமற்ற (கிக்) வேலைவாய்ப்பாக எல்லாத் துறைகளிலும் ஊழியர்களைப் பணிக்குச் சேர்க்கும் முறை நல்லதல்ல. முதலில் மத்திய, மாநில அரசுகள் தாற்காலிக அடிப்படையில் தொகுப்பூதிய அடிப்படையில் ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் முறைகளைக் கைவிட்டு தனியார் துறைக்கு முன்னுதாரணமாகத் திகழ்வது அவசியம்.

கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போல நகர்ப்புறங்களிலும் அமல்படுத்தப்பட்டால்தான் வேலைவாய்ப்பு, வருவாய், நுகர்வு எல்லாம் பெருகும். ஜிஎஸ்டி வரி வருவாயும் பல மடங்காகும். அரசுகள் இணக்கமாகச் செயல்படுவதே இப்போதைய தேவை. மத்திய அரசுதான் இதற்கு முன்முயற்சி எடுக்க வேண்டும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in